Trichy couple surrenders after 14 years in hiding

Advertisment

திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு ரூ. 45 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜெகநாதன் சில மாதங்களிலேயே திருச்சியிலிருந்து தப்பித்து தலைமறைவானார். இதனை அறிந்த நிதி நிறுவனம், ஜெகநாதன் கடன் வாங்கிவிட்டு, அந்த தொகையை கட்டாமல் தலைமறைவாகிவிட்டார் என மாவட்ட குற்றப்பிரிவு துறையில் புகார் கொடுத்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கடந்த 2008ம் ஆண்டு ஜெகநாதன், அவரது மனைவி உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. விசாரணையும் தேக்க நிலையில் இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் மாவட்டக் குற்றப்பிரிவு மீண்டும் அந்த வழக்கை கையில் எடுத்து விசாரிக்க தொடங்கியது. இந்த விசாரணையில் தலைமறைவான ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் சென்னையில் பதுங்கி இருப்பதாக குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் குற்றப் பிரிவு போலீசார் சென்னையில் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். இதனிடையே இந்த தகவல் அறிந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி நேற்று திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தானாகவே முன்வந்து ஆஜராகினர். கடந்த 14 ஆண்டுகளாக போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த தம்பதியினர் நீதிமன்றத்தில் ஆஜரானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.