Trichy Commissioner who replaced the special force that was involved smuggling of cannabis

தமிழ்நாடு முழுவதும் குற்ற சம்பவங்களை முன் கூட்டியே அறிந்து தடுப்பதற்காகவும், போதை பொருள் விற்பனை, கடத்தல், உள்ளிட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்கு என்று அந்தந்த மாவட்டங்களிலும், மாநகரங்களிலும், காவல்நிலையங்களை தாண்டி, அதிகாரிகள் தங்களுக்கென்று ஒரு தனிப்படையை உருவாக்குவார்கள். அதில் சிறப்பாக பணியாற்றும் காவலர்கள் யார் என்பதை அறிந்து அவர்களைத்தேர்வு செய்து, மாநகரிலும், மாவட்டத்திலும் குற்றங்களை தடுக்கும் விதமாக இந்த தனிப்படை செயல்படும்.

Advertisment

அதேபோல் தான் திருச்சி மாநகரில் அதிகரித்து வரும் குட்கா, கஞ்சா, போதை வஸ்துகள், லாட்டரி உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், அதில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும் 5 பேர் கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. அதில் திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியகுமார் தலைமையில் தலைமைக் காவலர்கள் சங்கராந்தி, ராஜேஸ்குமார், குமார், தங்கராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் மாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்டவற்றை தடுக்காமல், குட்காவை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரும் பெரிய முதலாளிகளுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். அதேபோல் கஞ்சா விற்பனைக்கும் அவர்கள் துணையாக இருந்ததோடு, வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்து குருவியாக தங்கம் கடத்தி வரும் கும்பல்களோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதோடு, அவர்களிடம் இருந்து கடத்தி வரும் தங்கத்தை அடித்து பிடிங்கும் பணியிலும் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

தமிழகத்தின் முன்னாள் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு 2.0, 3.0 என்ற திட்டத்தின்கீழ் குட்கா, கஞ்சா போன்றவை தமிழ்நாட்டிற்குள் வருவதை தடுக்க பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதே சமயம் தமிழகம் வழியாக கடத்தப்பட்ட பல்லாயிரம் கிலோ கஞ்சா, குட்கா போன்றவை கடத்தி செல்லும் போதே பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் பெரிய அளவில் குட்காவை மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரும் பெரிய முதலாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அதை கடத்தி கொண்டுவரும் நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த குட்கா, கஞ்சா கடத்தல் வழக்குகளில் பெரும்பாலும் காவல்துறையில் பணியாற்றும் தனிப்படையினர் தான் கடத்தல் முதலாளிகளுக்கு உளவாளிகளாக இருந்து வருகின்றனர். அப்படி பெரிய கடத்தல் முதலாளிகளுக்கு தான் இந்த 5 பேர் கொண்ட கும்பலும் உளவாளிகளாக இருந்துள்ளனர்.

இதனையறிந்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் 5 பேரையும் நேற்று திடீரென மாநகர ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மீது தொடர்ந்து பல குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டதையடுத்து அவர்களை் 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதே போல் குற்றச்சாட்டு உறையூர் காவல் ஆய்வாளர் ராஜா மீதும் எழுந்ததால், அவருக்கு ஆணையர் மெமோ கொடுத்து எச்சரித்து அனுப்பியுள்ளார். காவல் ஆணையரின் இந்த அதிரடி நடவடிக்கை காவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த தனிப்படையைஇயக்கிய உதவி ஆணையர் ஜெயசீலன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், கீழ் உள்ள காவலர்களை பழிகடாவாக்கியுள்ளனர். உயர் அதிகாரிகளின்இதுபோன்ற சம்பவங்களில் எப்போதும் கீழ் நிலையில் உள்ள காவலர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். எனவே உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுப்பார்களா? என்று காவல்துறையினர் வட்டாரங்களில் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.

Advertisment

இது தொடர்ர்பாக நாம் திருச்சி காவல் ஆணையரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “உதவி ஆணையர் ஜெயசீலன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பிறகு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியாக தெரிவித்தார்.