
திருச்சி மாநகரில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை அதிகமாக உள்ளது. காவல்துறையினர் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும் பெட்டிக்கடை, மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளை ரகசியமாக காகிதத்தில் மறைத்துவைத்து விற்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லாமல் தவிர்ப்பதும் என தொடர்ந்து பல புகார்கள் எழுந்துவருகின்றன.
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர், அனைத்து காவல் நிலையங்களிலும் பள்ளி - கல்லூரி மாணவர்களின் பாதுகாப்புக்கு என தனியாக ஒரு வாட்ஸ்அப் குழுவை அமைக்கவும், அதில் பள்ளி - கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், தகவலாளிகள் காவல்துறையினர் உள்ளிட்டோரை இணைக்கவும் உத்தரவிட்டார். மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பள்ளி கல்லூரிகளில் வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் பாதிப்பு, பள்ளி - கல்லூரி வந்து செல்லும் பகுதியில் உள்ள இடர்ப்பாடு, கஞ்சா புகையிலை பொருட்கள் விற்பனை, சமூகவிரோத கும்பல் தொடர்பான தகவல்கள் ஆகியவற்றைப் பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி - கல்லூரி மாணவர்கள் மீதான அத்துமீறல்களை ஆதாரத்துடன் கண்டறிந்து, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு காவல் நிலையம் வாரியாக நடவடிக்கை எடுக்க உதவும் என்று காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.