Trichy central IG explained the measars taken to prevent children

Advertisment

மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி. பாலகிருஷ்ணன், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது,“திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் குற்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் திருச்சி 28, புதுக்கோட்டை 39, கரூர் 15, பெரம்பலூர் 12, அரியலூர் 25, தஞ்சை 48, திருவாரூர் 27, நாகப்பட்டினம் 17, மயிலாடுதுறை 11 என மொத்தம் 222 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட அனைத்து இடங்களிலும் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர்கள், பெண்கள் உதவிக்குழு காவலர்கள் ஆகியோர் குழு உறுப்பினர்களுடன் இணைந்து நேரடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டம் நடத்திவருகிறார்கள்.

Advertisment

இதுவரை திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 9 மாவட்டங்களில், கடந்த 2 மாதங்களில் 450 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், மதுப்பழக்கத்திற்கு ஆளான தந்தையால் துன்புறுத்தப்படும் குழந்தைகள், கணவன் மனைவி இடையே ஏற்படும் குடும்ப பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் குறித்த விவரங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அவர்களுடைய பாதுகாப்பையும் நலனையும் உறுதிசெய்வதற்கான தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.

இதுவரை மத்திய மண்டலத்தில், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட 18 குழந்தைகள் கண்டறியப்பட்டு, மாவட்டக் குழந்தைகள் நலத்துறை மூலம் அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.