/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4634.jpg)
இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நேற்று மக்களவையில் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பேசினார். அப்போது அவர் தனது தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது; சமீபத்தில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட அறந்தாங்கி பகுதிகளில் இருந்தும் கடலோர மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். ஏற்கனவே 250 விசைப் படகுகள் இலங்கை கடற்கரையில் தமிழக மீனவர்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்படாமல் உள்ளது. சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் திருப்பி மீட்டு ஒப்படைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி, தமிழகத்தின் மையப்பகுதியாகவும், மாநகராட்சி நகரமாகவும் இருக்கிறது. இங்கு பெல், துப்பாக்கி தொழிற்சாலை, பீரங்கி தொழிற்சாலை, ரயில்வே தொழிற்சாலை இப்படி மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நிர்வாகங்கள், அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. எனவே திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும்.
திருச்சி மாநகராட்சி மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுமார் 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள். புதுக்கோட்டைக்கு அருகில் கருவேப்பிலான் ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க வேண்டும். திருவப்பூர்ரயில்வே மேம்பாலம் கட்ட உரிய அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும். திருச்சி – பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னைக்கு தினமும் ரயில் இயக்கப்பட வேண்டும்.
திருச்சியில் இருந்து காலை சென்னைக்கும், சென்னையில் இருந்து மாலை திருச்சிக்கும் பகல்நேர இன்டர் சிட்டி இணைப்பு ரயில் தினமும் இயக்க வேண்டும். தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டை வழியாக புதுக்கோட்டைக்கு புதிய ரெயில்வே வழித்தடம் ஏற்படுத்திட வேண்டும். திருச்சி அருகில் திருவரம்பூரில் சர்வீஸ் ரோடு ஏற்படுத்தித்தர வேண்டும். திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை நகரில் கேந்திர வித்யாலயா பள்ளி புதிதாக தொடங்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதேபோல், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேவை நேரில் சந்தித்த எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி பெல் நிறுவனத்தை முழுமையாக இயக்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)