Skip to main content

தாத்தாவின் சிலையை புதுப்பிக்கும் பேரன் ! மு.க. ஸ்டாலி்ன் திறந்து வைப்பது தான் நட்பின் உச்சம்!திருச்சி மாநகரில் கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மாவட்ட திமுக சார்பில் கே.என்.நேரு ஏற்பாட்டில் அண்ணாவின் சிலை, கலைஞரின் சிலை திறப்பு விழா வருகிற 10.06.2019 ம் தேதி நடைபெறுகிறது. அதே போல், அன்று காலையில் திருச்சியில் லால்குடி தொகுதியில் உள்ள அன்பில் கிராமத்தில் இருந்த அன்பிலார் சிலையை அவருடைய பேரன் அன்பில் மகேஷ்  புதுப்பித்ததை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

 

aதிருச்சி திமுகவில் மிக முக்கிய தலைவராக இருந்த அன்பிலார் குடும்பத்திற்கும் கலைஞர் குடும்பத்தினருக்கும் மூன்று தலைமுறையாக நட்பு தொடர்கிறது. இந்த நட்பின் அடிப்படையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியுடன் அன்பில் மகேஷ் நட்பில் தொடர்கிறார். மூன்று தலைமுறையாக நட்பு தொடர்கிறது என்பது அன்பிலார் - கலைஞர் குடும்பத்தில் மட்டுமே சாத்தியம்.


இதே போன்று திருச்சியில் கடந்த 2010 ஆண்டு கலைஞர் அறிவாலயத்தின் எதிரே அன்பிலார் சிலையை திறந்து வைத்தார். அப்போது முதல்வராக இருந்த கலைஞர், அன்பிலார் சிலை திறப்பு விழாவிற்கு தொண்டர்களை வரவேற்று ஒரு முரசொலியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் ..அதில் கலைஞர், அன்பிலுக்கு சிலை திறக்கும் நிகழ்ச்சிக்கு உன்னை அழைக்க அண்ணாவும் இல்லை, அந்த அன்பிலும் இல்லை. நான் தான் இருக்கிறேன் உனை அழைக்க. என் வாயார, மனமார உன்னையெல்லாம் திருச்சிக்கு அழைக்கிறேன் இந்த மடலின் மூலமாக!.அண்ணா மறைந்த பிறகு 1990ல் நடைபெற்ற மாநாட்டின் போது நம்மோடு இருந்த- அன்பிலின் மகன் சட்டமன்ற உறுப்பினராக, இளைஞர் அணியின் நிர்வாகியாக இருந்த தம்பி பொய்யாமொழியும் இப்போது இல்லை.

aதிருச்சியில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்ற வரிசையில் அன்பில் தர்மலிங்கத்தில் தொடங்கி, பொன்மலை பராங்குசம், து.ப.அழகமுத்து, திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன், குளித்தலை முத்துக்கிருஷ்ணன், எம்.எஸ்.மணி, மு.க.து. நடராசன், உப்பிலியாபுரம் அர.நடராசன், இளமுருகு பொற்செல்வி, திருச்சி பாலகிருஷ்ணன், கஸ்தூரிராஜ், நகரச் செயலாளராக இருந்த ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி, நாதன் கம்பெனி பாண்டுரங்கம், காமாட்சி. ராபி ஷரீப் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்!.1955ம் ஆண்டுவாக்கில் திருச்சியில் கழகத் தோழர்களிடையே சற்று ஒற்றுமையின்மை ஏற்பட்டபோது, அண்ணா திருச்சிக்கே இனி நான் வர மாட்டேன் என்றொரு முடிவினையெடுத்தார். அன்பில் தர்மலிங்கம் தலைமையில் திருச்சி தோழர்கள் எல்லாம் என்னை அணுகியபோது முதலில் அண்ணா ஒப்புக் கொள்ளாமல், என்னை திருச்சிக்கு அனுப்பி முதலில் அங்கே கழகத்திற்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சி செய்யச் சொன்னார்.   அவ்வாறே நானும் திருச்சி சென்று அதற்கான செயல்களில் ஈடுபட்ட பின்னர் அண்ணா மகிழ்ந்து, கைத்தறித் துணிகளை விற்பதற்காக கழகம் முடிவெடுத்து திருச்சியில் யார் விற்பது என்ற கேள்வி எழுந்த போது, "திருச்சியில் நானே கைத்தறித் துணி விற்கப் போகிறேன்'' என்று அண்ணா அறிவித்தார்.

 


ஒரு முறை தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் காலையில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு, அன்று மாலையில் அன்பில் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக ஒப்புக் கொண்டிருந்தேன். திருமணத்திற்காக நான், மாறன், அன்பில் தர்மலிங்கம், பராங்குசம், பண்ணை முத்து கிருஷ்ணன், குளித்தலை முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் காரில் போய்க் கொண்டிருந்தோம். அது ஒரு ஆற்றங்கரைப் பாதை.நாங்கள் அதே கரையில் இரண்டொரு மைல் தூரம் சென்று அதற்குப் பிறகு ஒரு பாலத்தைக் கடந்து, அடுத்த கரையில் உள்ள திருமண வீட்டிற்கு வந்தாக வேண்டும். அந்தத் திருமண வீட்டிற்கு எனக்கு முன்பு சென்றாக வேண்டுமென்று விரும்பிய அந்தப் பகுதி மக்கள் ஆற்றிலே இறங்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.எங்கள் கார் பாலத்தைச் சுற்றிக் கொண்டு அடுத்த கரை வழியாக வந்த போது, ஆற்றின் கரையில் ஒரு கூட்டம் நின்றதைக் கண்டு, காரை நிறுத்தி விட்டு, அன்பில் தர்மலிங்கம் அங்கே சென்று என்னவென்று விசாரித்தார்.

ஆற்றில் இறங்கி வந்த இளைஞர் ஒருவன் நீரில் மூழ்கி அவனைத் தூக்கி வந்து போட்டிருந்தார்கள். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பிழைக்கவில்லை. அவனது உயிரற்ற உடலை அனுப்பிவிட்டு திருமண வீட்டிற்குச் சென்று மணவிழாவினை நடத்தி வைத்து விட்டு, கல்லணைக்குத் திரும்பினோம்.

மாலையில் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுத் திரும்பும்போது, இரட்டை மாட்டு வண்டியில் சென்றால் சுற்றிக் கொண்டு போக வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் இறங்கி எதிரே உள்ள கல்லணைக்குச் சென்று விடலாம் என்று அனைவரும் கூற நானும் தலையை அசைத்து விட்டேன். கொள்ளிடத்தின் குறுக்கே இறங்கி கொஞ்ச தூரம் சென்றிருப் போம்.திடீரென ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. மாறனை அன்பில் தர்மலிங்கம் தன் தோளில் தூக்கிக் கொண்டார். ரத்தினம் என்ற ஒரு தோழர் என்னைத் தூக்கிக் கொண்டார். நேரமாக வெள்ளம் பெருகி, பிழைத்து கரையேறுவோமா என்பது சந்தேகத்திற்குரியதாகி, எப்படியோ நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரவு ஒரு மணி அளவில் கரையேறினோம். இதுவும் ஒரு மறக்க முடியாத சம்பவம்.அன்பில் தர்மலிங்கம் தன் வாழ்நாளில் பல பதவிகளை வகித்தவர். ஊராட்சி மன்றத்தலைவராக, கூட்டுறவு சங்க இயக்குநராக, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக, சென்னை கூட்டுறவு வங்கி இயக்குனராக, திருச்சி மாவட்ட கழகத்தின் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, வேளாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். என்னுடைய அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக மட்டுமல்லாமல், உள்ளாட்சித் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளையும் அவர் பொறுப்பேற்று நடத்தினார்.அண்ணாவின் அமைச்சரவையிலேயே இடம் பெற்றிருக்க வேண்டிய அன்பிலை; 1971ம் ஆண்டு நான் இரண்டாவது முறையாக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தபோது; 8-3-1972 அன்று எனது அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக ஆக்கினேன்.

1986ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அன்பில் தர்மலிங்கத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் "பெரியார் விருதினை'' என் கையினால் வழங்கி நானே பெருமைப்பட்டுக் கொண்டேன்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அன்பில் தர்மலிங்கம், உழைப்பால் உயர்ந்தவர். பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர், காயிதேமில்லத் போன்ற தலைவர்களின் அன்பைப் பெற்றார்.அன்பிலும் நானும் நண்பர்களாக தொடங்கியது- அடுத்த தலைமுறையில் தம்பி மு.க.ஸ்டாலினும், அன்பிலின் மகன் பொய்யாமொழியும் நண்பர்களாக இரண்டாம் தலைமுறையில் தொடர்ந்து- இப்போது ஸ்டாலினின் மகன் உதயநிதியும், பொய்யாமொழியின் மகன் மகேந்திரனும் நண்பர்களாகித் தொடருகிறது நட்பு. அந்த நட்பின் அடையாளச் சின்னம், அன்பிலின் சிலையைத் திறக்கத்தான் திருச்சி வருகிறேன்; அங்கே திருச்சி தீரர்களுடன் நீயும் இருப்பாய் என்ற நம்பிக்கையுடன் ....என்று உணர்ச்சியுடன் எழுதியிருந்தார். 

தற்போது அதே அன்பிலார் தாத்தாவின் சிலையை பேரன் அன்பில் மகேஷ் புதிதாக புதுப்பிக்க அதை அதே கலைஞர் அவர்களின் மகனும் தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலி்ன் திறந்து வைப்பது தான் நட்பின் உச்சம் என்கின்றனர் திமுக கட்சியினர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...