Trichy Aavin plant accident

Advertisment

திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணையில் கடந்த மாதம் 24ம் தேதி நள்ளிரவில் பாய்லர் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்த ஆயில் குழாய் அதிக வெப்பம் காரணமாக வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த துறையூரைச் சேர்ந்த ருத்ரேஸ்வரன்(24) என்ற ஒப்பந்த ஊழியர் உடல் முழுவதும் தீ பரவி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பால் பண்ணையில் தீயை கட்டுபடுத்த முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வீரா்கள் தீயை அணைத்தனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ருத்ரேஸ்வரன் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆவின் பாய்லர் ஆலை வெடித்ததற்கு காரணம் ஆவின் நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் தான் வெடித்தது என்று கூறி உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காப்பீடு தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பிரேத பரிசோதனை செய்த ருத்ரேஸ்வரனின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த கே.கே.நகர் காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.