
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்களன்று சேத்தியாதோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பழங்குடியின பொதுமக்கள் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியைச் சந்தித்து மனு ஒன்று அளித்தனர்.
அந்த மனுவில், புவனகிரி அருகே சேத்தியாதோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு கிளாங்காடு காட்டு நாயக்கன் தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அரசு அலுவலரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்களின் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். மேலும் அவர்கள் வாழும் இடத்தில் சாலை, கழிவுநீர் வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு அலுவலக வாயிலில் மனு அளிப்பதற்கு முன் சாதிச் சான்று உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோசங்களை எழுப்பினார்கள்.