Skip to main content

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள்; போக்கிடம் இல்லாமல் தவிப்பு

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

Hill people lost their homes due to Cyclone Mandus in Pollachi

 

மாண்டஸ் புயலால் வீட்டை இழந்த மலைவாழ் மக்கள் புதிய குடியிருப்புகள் கட்டித் தருமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் அணைக் கரையோரப் பகுதியில் உள்ளது சின்னார்பதி கிராமம். மலைவாழ் மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் வேட்டைத் தடுப்புத் தொழிலையும், கூலித்தொழிலையும் செய்து தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர். கடந்த 1992 ஆம் ஆண்டில் இப்பகுதி மக்களின் நலனுக்காக தமிழக அரசால் வீடுகள் கட்டித் தரப்பட்டன.

 

இந்த 30 ஆண்டுகளில் புயல் மற்றும் கனமழையால் இவர்களின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், மாண்டஸ் புயல் காரணமாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் சின்னார்பதி மக்களின் ஆறு வீடுகள் விழுந்து தரைமட்டமாகின. இருப்பினும், அந்தச் சமயம் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

 

இதையறிந்த வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி சின்னார்பதி மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களுடன் உதவித் தொகையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, வீடு இல்லாமல் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் புதிய குடியிருப்புகளைக் கட்டித் தர வேண்டும் எனத் தமிழக அரசுக்கு  கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து மாயவன், லட்சுமணன் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் பேசும்போது,  “நாங்க இங்க 40 குடும்பங்கள் இருக்கோம். கூலி வேலை செஞ்சி எங்களையும் எங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துட்டு வாறோம். இந்த பேய் மழையால எங்க வீடுகள் இடிந்து போய்விட்டது. அரசாங்கம் எங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தா நிம்மதியா இருக்கும்” என்றனர். அதுமட்டுமல்லாமல், சின்னார்பதி பகுதியில் ஒற்றை யானை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவசரத்திற்கு வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாராய வேட்டையில் சிக்கிய வெளிமாநில மது பாட்டில்கள்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
nn

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்புடைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சட்டவிரோத மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த இரண்டு நாட்களில் 1,382 மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பொள்ளாச்சி பெண்ணாபுரம் பிரிவு பகுதியில் கடந்த 22ஆம் தேதி மதுவிலக்கு போலீசார ஆய்வு செய்த பொழுது சரக்கு வாகனத்தில் வெளி மாநிலம் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் ராம் நகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு அது தொடர்பாக 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். இப்படியாக பொள்ளாச்சியில் கடந்த இரண்டு நாட்களில் 1,382 வெளிமாநில மது பாட்டில்களும் அவற்றை விற்க முயன்றவர்களும் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

ரிமால் புயல்; களத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்!

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
Remal Cyclon National Disaster Response Team in the field

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ரிமால் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது வங்காள தேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே இன்று (26.05.2024) நள்ளிரவு ரிமால் புயல் கரையைக் கடக்கிறது. அதாவது சாகர் தீவுக்கும் கெபுபாராவுக்கும் இடையே இந்த புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் கரையைக் கடக்கும் போது, அதிகபட்சமாக மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது.

இதனையடுத்து மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஹஸ்னாபாத் கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் (NDRF - National Disaster Response Force) தயார் நிலையில் உள்ளனர்.  அதோடு உத்திர டங்க என்ற இடத்தில் உள்ள பொதுமக்களிடம் ரிமால் புயல் கரையைக் கடப்பது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதற்கான முன்னறிவிப்புகளை வெளியிட்டனர். இது குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழு அதிகாரி ஒருவர் கூறுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 2வது பட்டாலியனின் குழு ஹஸ்னாபாத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை (27.05.2024) காலை 9 மணி வரை என சுமார் 21 மணி நேரத்திற்கு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 397 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.