tribal people allege that  government apartment houses are unfit for us to live in

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்திரபள்ளி கிராமம் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்து காட்சி அளிக்கும் மலைக் கிராமப் பகுதி. (நரிக்குறவர் )இங்குப் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதி உள்ளது. இப்பகுதி மக்கள் ஆரம்பத்தில் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். இருக்க இடம் தேடி அலைந்த நரிக்குறவர் மக்களுக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு 37 அரசு தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டன. இது பழங்குடியின மக்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்தது.

Advertisment

இந்த இடத்தில் சுமார் 40 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். சில வீடுகள் கட்டி முடிக்கப்பட்டாலும், பல வீடுகள் முடிவு பெறாத நிலையில் உள்ளது. பல்வேறு கனவுகளோடு அனைவரும் அரசு தொகுப்பு வீட்டில் குடியேறினாலும் மின்சாரமே இல்லாமல் இருட்டில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

Advertisment

இதுகுறித்து பழங்குடி மக்கள் கூறுகையில், “குடிசை வீட்டில் வாழும்போது நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தோம். தற்பொழுது வீடு கட்டித் தரப்படும் என்று கூறி 37 வீடுகள் தரப்பட்டுள்ளது. அவற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குடிதண்ணீர் கிடையாது, மின்சாரம் இல்லை, சாலை வசதி இல்லை, கழிவறை வசதி இல்லை. நாங்கள் வாழ்வதற்கு உண்டான எந்த ஒரு அடிப்படை வசதியும் அரசு தரப்பில் செய்து தரவில்லை. மழைக்காலத்தில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் அனைத்து நீரும் வீட்டின் முன்பு தேங்குகிறது. தரமற்ற முறையில் அவசரமாக வீடுகள் கட்டப்பட்டு அதிகாரிகள் வந்து திறப்பு விழா நடத்திவிட்டு புகைப்படம் எடுத்துச் சென்று விட்டனர்.

ஆனால் நாங்கள் வாழத் தகுதியற்ற இடமாக இந்த இடம் உள்ளது. சோலார் மூலம் இயங்கும் மின் விளக்குகள் அமைத்துத் தருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகாரிகள் தெரிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் மூன்று ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தான் இப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம். இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் தொல்லை அதிகமாக உள்ளது. மின்சாரம் இல்லாமல் எங்கள் குழந்தைகள் இரவு நேரத்தில் படிக்க முடியவில்லை.

Advertisment

பெண்களுக்கு மானம் தான் முக்கியம். பல்வேறு திட்டங்களில் தமிழகம் தன்னிறைவு பெற்று இருந்தாலும் எங்களுக்குக் கழிவறை வசதி, குளியலறை வசதி செய்து தரவில்லை, நாங்கள் புடவைகளைத் தடுப்பாகக் கட்டிக் கொண்டு தான் குளிக்கின்றோம். ஆரம்பத்தில் 37 குடும்பங்கள் வசித்து வந்தன. ஆனால் எந்த அடிப்படை வசதியும் செய்யப்படாத இந்த இடத்தில் பல்வேறு குடும்பங்கள் புலம்பெயர்ந்து அருகில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று விட்டனர்” என்றனர் வேதனையாக. தமிழக அரசு அடிப்படை வசதிகளை எங்களுக்குச் செய்து தர வேண்டும் என்பது பழங்குடியின மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.