
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின இளைஞர்கள் மூன்று பேர் காணாமல் போன நிலையில் அவர்களது குடும்பத்தினர் அவர்களின் நிலை என்னவானது என்று தெரியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த 14ஆம் தேதிகள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல், தர்மராஜ், பிரகாஷ் ஆகிய பழங்குடியின இளைஞர்கள் மூன்று பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மூவரையும் கூட்டிச் சென்ற போலீசார் எந்த காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள், என்ன புகார் காரணமாக அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பதை மூவரின் குடும்பத்தாருக்கும் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் கடந்த நவ. 16ஆம் தேதி இரண்டு பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும், அவர்களை விசாரணைக்குப் பின் உடனே விட்டுவிட்டதாகவும் பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அழைத்துச் செல்லப்பட்ட மூவரின் நிலை என்னவானது என தெரியவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் முறையிட்டிருந்தனர்.

இதுகுறித்து அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவரான சக்திவேல் என்பவரின் மாமியார் இளஞ்சியம் தனியார் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில், ''என் மருமகன அடிச்சி துன்புறுத்தி வண்டில ஏத்திருக்காங்க... இன்னவரைக்கும் எங்க வச்சிருக்காங்கன்னு எந்த தகவலும் கிடையாது. என் மருமகன் செத்துட்டாரா... இல்ல உயிரோட இருக்கிறாரா...ரெண்டு பேர அழைச்சிட்டு வந்துட்டாங்க... சக்திவேல்ங்கிறஎன் மருமகனை எங்க வெச்சிருக்காங்கன்னு தெரியாது.எனக்கு ஆம்பள புள்ளைங்க இல்ல...என் புள்ளைய விட்டா எனக்கு வேற வழியில்ல. என் புள்ளைக்கு எதுனா ஆச்சுன்னா நான் உயிரோட இருக்க மாட்டேன். என் மருமகனுக்கு எதுனா ஆச்சுன்னா நாங்க குடும்பத்தோட சாகுறததவிர வேற வழியில்ல'' என்றார் கண்ணீருடன்.

இந்நிலையில், சின்னசேலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 13 திருட்டு வழக்குகளில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள போலீசார் அவர்களிடமிருந்து 38 சவரன் நகைகளை மீட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களைக் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது அங்கு கூடியிருந்த பழங்குடி மக்கள், போலீசார் வாகனத்தின் முன்னின்று, அவர்கள் மீதுபொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகக்கூறிபோராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்களைப் போலீசார் அப்புறப்படுத்தி அவர்களை அங்கிருந்து கூட்டிச்சென்றனர்.இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow Us