பள்ளிகளுக்கு மே மாத கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில் தனியார் பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கைக்காக பதாகைகள் வைத்து விளம்பரங்கள் செய்து வருகின்றனர். பலர் சாலையோரங்களில் நிற்கும் பச்சை மரங்களில் ஆணி அடித்து பதாகைகளை தொங்கவிடுவதால் மரங்கள் பட்டுப்போய்சாயும் நிலை ஏற்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்களும் இயற்கை ஆர்வலர்களும் மன வேதனையடைந்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் எதிரில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நட்ட நாவல் மரம், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியின் நினைவாக இளைஞர்கள் நட்ட அத்திமரம் உள்பட நூற்றுக்கணக்கான பச்சை மரங்களில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நீட் கோச்சிங் மையத்தின் விளம்பரப் பதாகைகளை அந்த நிறுவன ஊழியர்கள் ஆணி அடித்து தொங்கவிட்டுள்ளனர். இதனைப் பார்த்த கீரமங்கலம் பகுதி இளைஞர்கள் பட்டுக்கோட்டை பயிற்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பச்சை மரங்களில் விளம்பரப் பதாகை வைக்க அடிக்கப்பட்டஆணிகளை உடனே பிடுங்கி அகற்ற வேண்டும் என்றனர்.
சில மணி நேரத்தில் கீரமங்கலம் வந்த ஊழியர்கள் தங்கள் நிறுவன பதாகை தொங்கிய மரங்களுக்குச் சென்று பதாகைகளை அகற்றி ஆணிகளையும் பிடுங்கி எடுத்தனர். இனிமேல் எந்தப் பகுதியிலும் பச்சை மரங்களில் பதாகை வைக்க ஆணிகள் அடிக்கக் கூடாது. மரங்களும் உயிர்கள் தான் என்பதை உணருங்கள். இப்படி ஆணி அடித்தே பல நூறு சாலையோர மரங்கள் பட்டுப்போவதற்கு இது போன்ற கல்வி நிறுவனங்கள் தான் காரணம். விளம்பரம் செய்ய எத்தனையோ வழிகள் இருக்கும் போது மரங்களைக் கொன்று தான் விளம்பரம் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள் என்று கூறினார்கள். இனிமேல் எந்த பச்சை மரங்களிலும் ஆணி அடிக்க மாட்டோம். ஆணி அடித்ததற்காக மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறி அங்கிருந்து சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/nm136.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/nm133.jpg)