
உலக நாடுகளையே அச்சுறுத்தி அழித்துக் கொண்டிருந்த கரோனா தற்போது இந்தியாவில் மையம் கொண்டு தினம் உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசுகள் தீவிர முயற்சிகள் எடுத்தாலும் கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றுபவர்களால் தொடர்ந்து பரவல் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியால் கரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்களே மூச்சுத்திணறி உயிர் விடும் நிலையில் உள்ளதால் இது "இந்தியா வகை கரோனா" என்று வெளிநாடுகளில் பெயர் வைத்துவிட்டனர்.
தமிழ்நாட்டிலும் மருத்துவமனைகளில் இடமின்றி தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு மருத்துவமனை வாசலிலும் ஆம்புலன்ஸ்கள் கரோனா நோயாளிகளுடன் பல மணி நேரம் காத்திருந்தும் இடம் கிடைக்காத நிலை தான் இன்றுவரை உள்ளது. இதனால பல உயிரிழப்புகளும் இருந்தது. இன்று வரை இந்த நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் தான் தமிழக அரசு கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது. இன்று குளமங்கலம் வடக்கு மறமடக்கி ஆகிய ஊர்களில் நடந்த மருத்துவ முகாம்களை சுற்றுச்சூழல் காலமாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசும் போது.. ''கரோனா பரவல் அதிகரித்து அதிகமான ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் தொடங்க நிலையிலேயே கண்டறிய கிராமங்கள் தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. மேலும் கரோனாவில் இருந்து நாம் தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே. அதனால் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்'' என்று பேசினார்.
தொடர்ந்து முகாமிற்கு வந்திருந்த மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், சுகாதார துணை இயக்குநர் விஜயகுமார் ஆகிய அதிகாரிகளிடம்.. ''ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது காய்ச்சல் அதிகரித்துள்ளது. கரோனா பரவலும் உள்ளது. அதனால் முதல் முயற்சியாக மறமடக்கியில் காய்ச்சல் போன்ற தொந்தரவு உள்ளவர்களை அழைத்து வந்து பரிசோதனைகள் செய்து அவர்களை அரசு மேல்நிலைப்பள்ளியில் படுக்கை வசதி செய்து தங்க வைத்து தொடக்க நிலையிலேயே சிகிச்சை அளித்து குணமாக்குவது அதிலும் தொற்று அதிகமாக உள்ளவர்களை மட்டும் மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்கு அனுப்புவது. அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மின் வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்யும். அதனால் உடனே பள்ளியை ஆய்வு செய்து படுக்கைகளை தயார் செய்யுங்கள்'' என்று உத்தரவிட்டார்.

மேலும்,''இவர்களை இதே ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை மருத்துவர், செவிலியர்கள் கவனித்துக் கொள்வார்கள். கூடுதலாக மருத்துவர், செவிலியர் தேவை என்றாலும் உடனே அனுப்புகிறோம். இதேபோல மற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள கிராமங்களிலும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இப்படி தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை கொடுப்பதால் உயிர்பாதிப்பு இல்லாமல் அனைவரையும் குணமடைய செய்யலாம். நுரையீரல் பாதிப்பு இல்லாமல் ஆக்ஸிஜன் தேவையையும் ஒரே இடத்தில் கடைசி நேரத்தில் குவிவதையும் தடுக்க முடியும்'' என்றார்.
இந்த உத்தரவையடுத்து அதிகாரிகள் பள்ளி வகுப்பறைகளில் படுக்கை போடுவது பற்றி ஆய்வு செய்து முதல்கட்டமாக 30 படுக்கைகள் போட தயார் செய்துள்ளனர். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கிராம பள்ளிகளிலேயே கரோனா சிகிச்சை மையம் தொடங்குவது மறமக்கியில் தான். இதே போல தமிழகம் முழுவதும் தொடங்கினால் மருத்துவமனைக்கு போக பயப்படும் அனைவரும் சொந்த ஊரிலேயே வந்து சிகிச்சை பெற்று செல்வார்கள். மாவட்ட மருத்துவமனைகளில் படுக்கைக்காக காத்திருக்க வேண்டியதில்லை.