
மாணவர்களின் சீர்கெட்ட நடவடிக்கைகளால் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கத்தான் செய்கிறது. ஓடும் பேருந்துகளில் ஏறுவது, பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் அனுதினமும் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகின்றன. இந்நிலையில் திருநெல்வேலியில் அரசு பேருந்தில் படியில் தொங்கிக் கொண்டு சென்ற பள்ளி மாணவன் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாநகரில் இயங்கும் பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்கள் படித்து வரும் நிலையில் காலை மற்றும் மாலை வேலைகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை நெல்லை சந்திப்பில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து வீரவநல்லூர் செல்லும் பேருந்தில் ஏறிய தனியார் பள்ளியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஸ்ரீகாந்த் படிக்கட்டில் தொங்கியபடி சென்று கொண்டிருந்த நிலையில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இந்த காட்சிகள் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்பொழுது மாணவன் ஸ்ரீகாந்த் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.