Skip to main content

படிக்கட்டில் பயணம்! தவறிவிழுந்த மாணவர்கள்! 

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

Travel up the stairs! Failed students!

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகில் உள்ளது நல்லூர். இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மேல் நிலைப்பள்ளி, 24 மணிநேர சுகாதார நிலையம், பிரசித்தி பெற்ற வில்வனேஸ்வரர் கோவில் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. இதனால், இந்த ஊருக்கு பல்வேறு கிராம மக்களும் அதிகளவில் வந்துசெல்வர். ஆனால், அப்படி வந்து செல்பவர்களுக்கு ஏற்றவகையில் பேருந்து இல்லை என்று மக்கள் வெகு நாட்களாக குற்றச்சாட்டை வைத்துவருகின்றனர். 


இதனால் பள்ளி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது பயணிகள் உள்ளிட்டவர்கள் இயக்கப்படும் குறைவான பேருந்துகளில் அதிகளவில் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. அதேபோல் நேற்று மாலை அலுவலக பள்ளி நேரம் முடிந்து பேருந்துக்காக அதிகமானோர் காத்திருந்தனர். நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு வந்த பேருந்தில் அனைவரும் ஏற கூட்டநெரிசலுடன் பேருந்து சென்றுள்ளது. 


இதில், பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக இரண்டு பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர். உடனே பேருந்து ஓட்டுநர் அன்பழகன் வண்டியை நிறுத்தினார். கீழே விழுந்த மாணவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் இல்லாமல் தப்பித்துக் கொண்டனர். 


இதுகுறித்து மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் பேருந்து ஒரு மணி நேரம் தாமதமாக  புறப்பட்டது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் இன்னும் கூடுதல் பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என மாணவர்களும், மக்களும் கோரிக்கை வைக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்