Transport workers strike! The High Court investigates the first case!

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர்.

Advertisment

இதற்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து சென்னை பல்லவன் இல்லத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமுகமான முடிவுகள் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

Advertisment

இந்நிலையில், திட்டமிட்டபடி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று (9ம் தேதி) முதல் வேலை நிறுத்தத்தை துவங்கினர். ஆனால், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் பங்கேற்காததால், அவர்களை வைத்து தமிழ்நாடு முழுக்க பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் அனைத்து பேருந்துகளும் இயங்க, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையிலும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு என்பது பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவிப்பது சட்ட விரோதம். போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரிக்கப்பட இருக்கிறது.

Advertisment

அதேபோல், வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத்தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் ஆஜராகி முறையீடு செய்தார். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்ந்தால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி, இதுதொடர்பாக தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, மனுவாகத்தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத்தெரிவித்தனர். வழக்கின் மனுவை அரசுத்தரப்பிற்கும், போக்குவரத்து கழகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற் சங்கங்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டனர். தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவுப்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெறவுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில், இந்த வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.