
நெல்லை மாவட்டம் திசையன்விளைப் பகுதியில் செல்வ நாராயணன் தெரு பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் திடீரென்று நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த டிரான்ஸ்ஃபார்மர் மூலம் மின் இணைப்பு பெற்றிருந்த அருகிலுள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளிலுள்ள மின் மீட்டர்கள் வெடித்துக் கருகின.
வீடுகளில் செயல்பாட்டிலிருந்த டி.வி., ஃப்ரிட்ஜ், மின்விசிறி, மின்மோட்டார் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதடைந்துள்ளன. இது எங்களுக்கு பேரிழப்பாகும் எனவே எங்களது வீடுகளில் சேதமான மின் மீட்டர்களை உடனே மாற்றி மின் இணைப்பு தருவதுடன் சேதமடைந்த மின் சாதனங்களுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிரான்ஸ்ஃபார்மர் வெடித்ததற்கு பல காரணமிருக்கலாம். மேலும் தற்போது அடிக்கிற 104 டிகிரியையும் தாண்டிய கொதி வெயிலின் காரணமாக டிரான்ஸ்ஃபார்மரிலுள்ள ஆயில் கொதிநிலை கடந்திருக்கலாம் அதன் காரணமாகவும் நடந்திருக்கலாம் என்கிறார்கள் மின்சாதனம் தொடர்புடையவர்கள்.