Skip to main content

அகற்றப்பட்ட பெரியார் சிலை; வட்டாட்சியர் பணியிடமாற்றம்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Transfer RDO issue removal of Periyar statue in Sivagangai

 

"எச்.ராஜா வீடு இங்கதான் இருக்கு.. ஆனா யாரோ ஒருத்தர திருப்திப்படுத்தணும்னு.. எங்க பெரியார் சிலைய எடுத்துட்டு போயிட்டாங்க" என வெகுண்டெழுந்த பெரியாரிஸ்டால் சிவகங்கை பகுதியில் பதற்றம் நிறைந்து காணப்படுகிறது.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த இவர், திருமயம் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இளங்கோவன் தனது சொந்த முயற்சியால் தமிழ் இல்லம் எனும் பெயரில் ஒரு வீட்டைக் கட்டி, அதில் ஒரு நூலகத்தையும் அமைத்துள்ளார். அதுமட்டுமின்றி, பெரியார் மீது கொண்டுள்ள பேரன்பின் காரணமாக பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி அவரது வீட்டின் சுற்றுச்சுவரில் மார்பளவு பெரியார் சிலை ஒன்றை அமைத்துள்ளார். இந்த பெரியார் சிலை கடந்த 29 ஆம் தேதியன்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களால் திறக்கப்படவிருந்தது.

 

இது குறித்து தகவலறிந்த பள்ளத்தூர் காவல்நிலைய போலீசார், கடந்த சனிக்கிழமையன்று இளங்கோவன் வீட்டிற்கு சென்று, காம்பவுண்ட் சுவரின் மேல் பெரியார் சிலை திறப்பது குற்றம் எனக்கூறி சிலையை அகற்ற வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளங்கோவன், "இது என்னோட பட்டா நிலம். என்னோட இடத்துல சிலை வைக்குறதுல என்ன தப்பு இருக்கு" என போலீசாரிடம் வாதாடியுள்ளார். அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பெரியார் சிலையை அகற்றி, சரக்கு வாகனத்தில் ஏற்றி காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். இதனால் விரக்தியடைந்த இளங்கோவன், ‘யாரோ ஒருவரை திருப்திப்படுத்துவதற்காக இந்த பெரியார் சிலையை அகற்றியுள்ளது இந்த காவல்துறை’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

 

அதே நேரம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் பண்ணை வீடு இளங்கோவன் வீட்டிற்கு அருகில் இருக்கிறது. அவர்களின் அழுத்தம் காரணமாகவே பெரியார் சிலை அகற்றப்பட்டதாக அரசல்புரசலாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே, பெரியார் சிலை அகற்றப்பட காரணமாக இருந்த தேவகோட்டை ஏ.எஸ்.பி கணேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், காரைக்குடி வருவாய் வட்டாட்சியர் கண்ணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, "சட்டப்படி உத்தரவு பெற்று சிலை திறப்பை மீண்டும் நடத்துவோம் என உறுதி கூறியுள்ளார். மேலும், பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தால் அப்பகுதியில் பதற்றம் நிறைந்து காணப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சோதனை செய்யும் பறக்கும் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை'- தேவநாதன் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Action on Test Flying Officers'- Devanathan's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திருவரங்குளம், வம்பன், குளவாய்ப்பட்டி உட்பட பல கிராமங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்தார். வேட்பாளரின் பிரச்சார இடங்களுக்கு வந்த தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் வேட்பாளர் வாகனத்தை சோதனை செய்ய கேட்டனர்.

அதேபோல திருவரங்குளத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்திற்குள் பறக்கும் படை வாகனம் வந்ததும் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த தேவநாதன், 'இது திமுக தேர்தல் இல்லை நாடாளுமன்றத் தேர்தல். தொடர்ந்து எங்கள் பிரச்சாரத்தில் இடையூறு ஏற்படுத்துவது போல அதிகாரிகள் கூட்டத்திற்குள் வருகின்றனர். தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் இந்த அதிகாரிகள் மீது புகார் கொடுப்போம். நடவடிக்கை இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

தேர்தல் விதிமுறைகளின் படி பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்வது வழக்கமானது தான் ஆனால் தேவநாதன் அதிகாரிகளை மிரட்டுவது போன்று பேசுகிறார் என்கின்றனர் அதிகாரிகள்.

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
Rules of Conduct for Elections Dravidar Kazhagam who worked strategically

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாக வைத்து திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் சிலையைத் துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இத்தகைய செயலுக்கு திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரியாரின் சிலையை மூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவின் நகலைக் காண்பித்து சிலை மூடப்பட்ட அரை மணி நேரத்தில் பெரியார் சிலை மீண்டும் திறக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.