
விழுப்புரத்தில் ரயில்வே டிராக்கை கடந்து கொண்டிருந்த டிராக்டர் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகர்கோவிலில் இருந்து தினசரி இயக்கப்படக்கூடிய அதிவிரைவு ரயில் மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ரயில் விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு அருகே உள்ள ஆத்திப்பட்டு என்ற கிராமத்தில் ஆளில்லாத ரயில்வே கேட்டை கடக்க இருந்தது. அப்பொழுது வயல்வெளி பகுதியில் இருந்து டிராக்டர் ஒன்று ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றது.
இதில் எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த ரயில் டிராக்டர் மீது மோதியது. டிராக்டரில் இருந்து எகிறிக் குதித்து டிராக்டர் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார். டிராக்டர் தூக்கி வீசப்பட்ட நிலையில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலின் முன் பகுதியில் சிறிது சேதங்கள் ஏற்பட்டதால் சுமார் அரை மணி நேரம் ரயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் கிளம்பியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.