சென்னை துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் வந்தது. அப்போது ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவெனப் பற்றிய தீயானது பல்வேறு பெட்டிகளுக்குப் பரவியது. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு வேகன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. ஒரு பெட்டியில் தீப்பிடித்த நிலையில் தீயானது 8 பெட்டிகளுக்குப் பரவியது.
இதனால் அந்த பகுதியில் வானுயர கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர். சுமார் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் 13 பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் வசதிக்காகத் திருவள்ளூரில் இருந்து சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் 10க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த தீ விபத்து காரணமாகத் திருவள்ளூரில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்தன. இந்த விபத்து தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் சுமார் 15 மணி நேரத்தைக் கடந்தும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதாவது தண்டவாளத்தில் ரயில் விழுந்த பெட்டிகளை ராட்சத கிரேன்கள் மூலம் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.