/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/N399.jpg)
சில தற்கொலைகளுக்கான காரணம் வியப்பாகவும், நம்பமுடியாததாகவும் இருக்கும். அப்படியொரு சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது. விருதுநகரைச் சேர்ந்த ஆனந்தராஜ், லோரா மருத்துவமனை மற்றும் சொர்ணலட்சுமி மருந்துக்கடை நடத்திவருகிறார். தனது மகன் லோகேஷ், MBBS டாக்டராக வேண்டுமென்று கிர்கிஸ்தானுக்கு அனுப்பி, அங்குள்ள ஜாலாலாபாத் பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்துள்ளார். அங்கு மூன்றாமாண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்த லோகேஷ், விடுமுறையைக் கழிப்பதற்காக ஜூன் மாத கடைசியில் விருதுநகர் வந்துள்ளார். வழக்கம்போல், தனது பிறந்தநாளை (ஆகஸ்ட் 11-ஆம் தேதி) சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று லோகேஷ் கேட்க, அவருடைய அம்மா “சிம்பிளாகக் கொண்டாடினால் போதும்..’' என்று கூறியிருக்கிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தை பெரிதும் எதிர்பார்த்த லோகேஷுக்கு அம்மா மறுத்துப் பேசியது மன உளைச்சலைத் தந்துள்ளது. 9-ஆம் தேதி இரவு மயக்கமாக இருக்கிறது எனக்கூறி, அல்புரோ சோலம் என்ற மாத்திரை அட்டையை, அவர்களது மருந்துக்கடையிலிருந்து எடுத்துள்ளார். அதன்பிறகு, ஒரு மாதிரியாக தலைவலியும் கிறுகிறுப்புமாக இருக்கிறது என்று லோரா மருத்துவமனையில் இருந்தவர்களிடம் கூறியிருக்கிறார். உடனே அவர்கள், லோகேஷின் சட்டைப் பையைப் பார்த்துள்ளனர். மொத்த மாத்திரை அட்டையும் காலியாக இருந்துள்ளது. அந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, லோகேஷை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல், 10-ஆம் தேதி அதிகாலை 4-45 மணிக்கு லோகேஸ் இறந்துவிட்டார்.
ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கை, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 174-ன் கீழ் சந்தேக மரணம் எனப் பதிவு செய்திருக்கிறது, விருதுநகர் மேற்கு காவல்நிலையம். மருத்துவம் படித்து வந்த மாணவர் லோகேஷுக்கு உயிரின் மதிப்பு தெரியாமல் போனது கொடுமைதான்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)