/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/995_185.jpg)
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சிகிராமத்தைச் சேர்ந்தவர் புரட்சித்தமிழன்(27). இவரை இரும்புலிகுறிச்சி போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி பரணம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் தாலிச்செயினை அறுத்த வழக்கில் போலீசார் புரட்சித்தமிழனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இவர் மீது அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் இது போன்ற திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் இதன் காரணமாக அரியலூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி அவர்கள் புரட்சித்தமிழனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த புரட்சித்தமிழனைவழக்கு சம்பந்தமாக செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் நேற்று அழைத்து வந்தனர். அவரை பார்ப்பதற்காக அவரது மனைவி அங்கு வந்திருந்தார். கணவரைப் பார்த்ததும் கதறி அழுத அந்தப் பெண் திடீரென கையில் வைத்திருந்த விஷமருந்தைக் குடித்துள்ளார். இதைக் கண்டு போலீசார் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் அவரை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, “எனக்கு 17 வயது தான் ஆகிறது. கடலூர் மாவட்டத்தில் எனது கிராமம் உள்ளது. புரட்சித்தமிழனைக் காதலித்துத்திருமணம் செய்து கொண்டேன்.என் கணவருக்குத்திருட்டுப் பழக்கம் இருப்பது எனக்குத்தெரியாது. இந்த நிலையில், என்பெற்றோர், உற்றார் உறவினர்கள் யாருடைய ஆதரவும் இல்லாமல் தவித்து வருகிறேன். எனக்கு இருக்கும் ஒரே ஆதரவு எனது கணவர் மட்டும் தான். எனவே, அவரை விடுதலை செய்ய வேண்டும். இனிமேல் அவர் திருட்டு தொழிலுக்குப் போகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்ட போலீசார் நாங்கள் உங்கள் கணவரை விடுதலை செய்ய முடியாது. நீங்கள் நீதிமன்றத்தைத்தான் நாடவேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கிடையே புரட்சித்தமிழனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் கொண்டு சென்று அடைத்துள்ளனர். திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட கணவரை விடுதலை செய்யக்கோரி பெண் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் விஷம் குடித்த சம்பவம் பரிதாபத்துக்குரியதுதான். இருந்தும், சட்டத்தின்படி தான் எல்லாம் நடக்கும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள். இந்தச் சம்பவம் செந்துறை பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)