
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூர் அருகே இருக்கும் குள்ளலகுண்டை சேர்ந்த விவசாயி பாண்டி. இவருக்கு கொடைரோடு சிறுமலை அடிவாரம் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியில் உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டி புகார் கொடுத்தார். அந்த புகார் மீது இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்து வந்தார் எனச் சொல்லப்படுகிறது. இதனால் பாண்டி நிலக்கோட்டை நீதிமன்றத்தை நாடி வழக்குப்பதிவு செய்வதற்கான உத்தரவையும் வாங்கிக் கொடுத்தார். அப்படி இருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.
அதனால் மனம் நொந்துபோன விவசாயி பாண்டி கடந்த 9 ஆம் தேதி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு காவல் நிலைய வாசற்படி முன் உட்கார்ந்து விஷம் குடித்தார். அதைக் கண்ட காவல்துறையினர் பாண்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாண்டி உயிரிழந்தார். இதனால் பாண்டியின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த விஷயம் எஸ்.பி. பாஸ்கரன் காதுக்கு எட்டவே உடனே பாண்டி கொடுத்த புகாரின் பேரில் நாச்சியப்பன், சங்கர், சின்ன கருப்பு ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அதிரடி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதோடு எஸ்.பி. உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. விசாரணையும் செய்து வந்தார்.
இந்த நிலையில், விவசாயி பாண்டி காவல் நிலையம் முன்பு விஷமருந்து குடித்துவிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுதும் கூட, மனிதாபிமான அடிப்படையில் அவரைக் காப்பாற்ற எந்த ஒரு ஆர்வமும் காட்டாமல் இன்ஸ்பெக்டர் போன் பேசிக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. டிஐஜி மற்றும் எஸ்பி உள்பட போலீஸ் அதிகாரிகள் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதோடு பாண்டியின் விஷயத்தில் இன்ஸ்பெக்டர் மெத்தனமாக செயல்பட்டது எதிர்த்தரப்புக்கு சாதகமாக அமைந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, எஸ்பி பரிந்துரையின் பெயரில் முதல் கட்ட நடவடிக்கையாக இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமியை நேற்று காலையில் ஆயுதப்படைக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்தனர். அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட விசாரணை அடிப்படையில், நேற்று மாலையிலேயே இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். இப்படி ஒரே நாளில் எஸ்பி மற்றும் ஏசி அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதை கண்டு மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் அரண்டு போய் இருக்கிறார்கள்.