ஒருதலை காதலால் பெண் மீது அரிவாள் வெட்டு; இளைஞர் கைது

Tragedy of woman due to one-sided love; Youth arrested

சென்னை மேடவாக்கம் பகுதியில், காதலை ஏற்க மறுத்த மாணவியை இளைஞர் ஒருவர் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மேடவாக்கம், பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பயின்று வந்தார். நேற்று காலை கல்லூரிக்கு வழக்கம் போல் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒட்டியுள்ள சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் அந்த மாணவியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்பொழுது மாணவியிடம் அந்த இளைஞர் காதலை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாய் என வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. திடீரென கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இளைஞர் மாணவியைத் துரத்தியுள்ளார். மாணவி உடனடியாக ஓடிச் சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்தும் பகுதிக்குள் பதுங்கியுள்ளார்.

விடாமல் துரத்திய அந்த இளைஞர் மாணவியைச் சரமாரியாக வெட்டிவிட்டு ஓடியுள்ளார். பொதுமக்கள் மத்தியில் நிகழ்ந்த இந்த அரிவாள் வெட்டு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு அரிவாள் வெட்டில் ஈடுபட்ட இளைஞனைப் பிடிக்க முயன்றபோது அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனடியாகத் தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

வெட்டுக் காயத்துடன் சாலையில் கிடந்த மாணவிக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவிக்கு கை மற்றும் இரண்டு தொடைப் பகுதிகளில் அரிவாள் வெட்டு பலமாக விழுந்துள்ளது. முகத்திலும் அடிப்பட்டுள்ளது. உடனடியாக மேல் சிகிச்சைக்காக மாணவியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சையில் இருக்கும் மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் வசந்த் என்பதும், கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, அந்த இளைஞர் தன்னைக் காதலிக்குமாறு தொல்லைக் கொடுத்து வந்ததாக மாணவி தெரிவித்துள்ளார். அரிவாள் வெட்டில் ஈடுபட்ட வசந்த் என்ற இளைஞரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீலாங்கரை பகுதியில் இருந்த வசந்த்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai incident police
இதையும் படியுங்கள்
Subscribe