Skip to main content

அழுகிய நிலையில் உடல்கள்; சடலத்துடன் வாழ்ந்து வந்த தாய் - மகன் 

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Tragedy  poverty  Erode Gopi

 

புதைக்கப் பணமின்றி இறந்த தனது தாய் மற்றும் கணவரின் சடலத்தை ஒரு வாரம் வீட்டிலேயே வைத்திருந்த பெண்ணின் நிலை பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர்கள் மோகனசுந்தரம்(74) சாந்தி (61) தம்பதியினர். இவர்களுக்கு சசி ரேகா என்ற மகளும், சரவணகுமார் என்ற மகனும் உள்ளனர். இதில் சசி ரேகா திருமணமாகி காங்கேயத்தில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மகன் சரவணகுமார் மன வளர்ச்சி குன்றியதால் தன்னுடனே மோகனசுந்தரம் - சாந்தி தம்பதியினர் வைத்துள்ளனர். மேலும் சாந்தியின் தாயும் இவர்களுடனே வசித்து வந்திருக்கிறார். 

 

மோகனசுந்தரம் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து ஓய்வு பெற்றவர். அதனால் போதிய வருமானம் இல்லாமல் இந்த குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துள்ளது. ஒரு வேளை உணவிற்கே வழியில்லாத நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சாந்தியின் கணவர் மோகனசுந்தரம் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாந்தியின் தாயும் மரணமடைந்துள்ளார். மேலும், இறந்த உடல்களுடன் சாந்தி தனது மகனோடு வசித்து வந்துள்ளார். 

 

இந்த நிலையில், நேற்று காலை அவர்களது வீட்டிலிருந்து அதிக அளவில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாந்தியின் வீட்டிற்குள் சென்று பார்த்ததில் அழுகிய நிலையில் மோகனசுந்தரம் மற்றும் சாந்தியின் தாய் இருவரின் உடல்கள் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே இறந்தவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து சாந்தியிடம் விசாரணை நடத்தினர். அதில் ஒரு வேளை சாப்பாட்டிற்கே வழியில்லை; புதைப்பதற்கு பணம் எங்கே போவது என்றும், அதனால் தான் இறந்த உடலை வீட்டிலேயே வைத்துள்ளோம் என்று சாந்தி தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இருவரது இறுதிச் சடங்கையும் போலீசாரே தங்களது சொந்த செலவில் நடத்தி இருவரது உடலையும் அடக்கம் செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்