
விழுப்புரம் அருகே உள்ளது காணை வயலாமூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 43 வயது நடராஜன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரிந்துவருகிறார். இந்த நிறுவனத்திலிருந்து வங்கிக்குச் செலுத்துவதற்காக அவரிடம் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளனர். அவர் அந்தப் பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார்.
அப்படி செல்லும்போது மாம்பழப்பட்டு அருகே உள்ள ஒரு டீக்கடையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றுள்ளார். டீ குடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தின் பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து நடராஜன் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துவருகிறார்கள்.
திருடப்பட்ட பணம் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத அந்த ஊரில் இருசக்கர வாகனப் பெட்டியில் வைத்திருந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.