Skip to main content

துக்க வீட்டில் நடந்த விபரீதம்!

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Tragedy in the house of mourning!

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவா. இவர் சென்னையில் நடைபாதை வியாபாரியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு மஞ்சள் காமாலை நோய் கடுமையாக பாதிக்கப்பட்டதால் நேற்று (13-11-23) பரிதாபமாக உயிரிழந்தார். 

 

இந்த நிலையில், இவரது உடல் அவரது சொந்த ஊரான சாத்தனூருக்கு குளிர்சாதன பெட்டி மூலம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து தேவா மறைந்ததையொட்டி அவரது உறவினர்கள் தேவாவின் உடலுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வந்தனர். இதில் தேவாவின் தம்பி பகவான், குளிர்சாதன பெட்டியை தொட்டு அழுதபோது திடீரென்று அவருக்கு மின்சாரம் தாக்கியது. 

 

அப்போது அருகில் இருந்த பெண்கள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் அவரை காப்பாற்ற சென்ற போது அவர்களது உடல்களிலும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அனைவரும் மயக்கமடைந்தனர். உடனே அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு அனைவரும் காப்பாற்றப்பட்டனர். துக்க விழாவுக்கு சென்ற போது மின்சாரம் தாக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்; கைதானவர்கள் விவரங்கள் வெளியீடு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
worth 2 thousand crores incident details released

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் திரைப்படத் தயாரிப்பாளரும், தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்தான் அந்த நபர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதானவர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தல் கும்பல் தலைவனாக ஜாபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. 

Next Story

பா.ஜ.க.வை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
the former minister CV shanmugam who slammed the BJP

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் ஆட்சி செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார். 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்குக் கிட்டத்தட்ட ஆயிரம் எஞ்ஜினியர்கள் வேலைக்கு எடுத்தனர். இவர்களில் ஒரு தமிழருக்கு கூட இல்லை. அத்தனை பேரும் வட இந்தியர்கள். ஜிப்மர் மருத்துவமனையில் வேலை கொடுங்கள், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை கொடுங்கள். அரசு நிறுவனங்கள் எல்லாம் விற்று விட்டனர். இந்தியாவில் இரண்டு பேர் மட்டுமே வளர்ந்துள்ளனர். ஒருவர் அம்பானி மற்றொருவர் அதானி. பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் திருவள்ளுவர், தமிழ் என்று பேசுவார். ஆனால் மறுபுறம் இந்தி திணிப்பு.

மத்திய பா.ஜ.க. அரசு மதத்தின் பெயரால் நாட்டை துண்டாடப் பார்க்கிறது. அமைதியாக உள்ள தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரும் சமம். வழிபாட்டு உரிமை என்பது என்னுடைய உரிமை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூற பா.ஜ.க.வுக்கு உரிமை இல்லை” என்று ஆவேசமாக பேசினார்.