Skip to main content

சுற்றுலா சென்றபோது நேர்ந்த சோகம்! 

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

The tragedy that happened when went on tour!

 

தமிழ்நாடு அரசு, சமீபத்தில் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அதன்படி நீர்வீழ்ச்சிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள பெரியார், மேகம் ஆகிய நீர்வீழ்ச்சிகளுக்கும் பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. 

 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகிலுள்ள சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் சத்தார் என்பவரின் மகன் இஸ்மாயில்(27), மற்றும் அவரது நண்பர்கள் முகமது யூசுப், அசன் அலி, முகமது ரபிக், முகமது முனாப் ஆகியோர் 19ஆம் தேதி காலை ஒரு காரில் கல்வராயன் மலையை சுற்றி பார்ப்பதற்காகச் சென்றுள்ளனர். மலைப்பகுதியைச் சுற்றி பார்த்துவிட்டு, மதியம் 2 மணி அளவில் புளியங்கோட்டை அருகில் உள்ள கொடிய நூர் நீர்வீழ்ச்சியில் இஸ்மாயில் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இஸ்மாயில், ஹசன் அலி, முகமது ரபிக், முகமது யூசுப் ஆகிய 4 பேரும், வாழை வழுக்கு தண்ணீர் தேங்கிய பகுதியில் விழுந்துள்ளனர். 

 

இதில் மூன்று பேர் தண்ணீரில் தத்தளித்த நிலையில், நீந்திக் கரையேறி விட்டனர். இஸ்மாயிலுக்கு நீச்சல் தெரியாததால் அவரால் நீந்தி வெளியே வர முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அவரது நண்பர்கள், உடனடியாக சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின்படி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீர்வீழ்ச்சியில் இறங்கி தேடினர். அங்கு இஸ்மாயில் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதன்பிறகு வடபொன்பரப்பி போலீசார் இஸ்மாயில் உடலை, மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இஸ்மாயில் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்