Tragedy for the girl who went to work! Two arrested in POCSO

Advertisment

நாமக்கல் அருகே, நூற்பாலையில் வேலை செய்து வரும் சிறுமியை இரு வாலிபர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள வால்ராசாபாளையத்தைச் சேர்ந்தவர் சினேகா (வயது 14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த 21ம் தேதி, இரவு 10 மணி ஷிப்டிற்கு சிறுமி வேலைக்குச் சென்றார். அவருடைய தந்தைதான் தனது மோட்டார் சைக்கிளில் சென்று நூற்பாலையில் இறக்கி விட்டு வந்துள்ளார். சிறுமியும் ஆலைக்குள் சென்று விட்டார்.

அதையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல் வீட்டிற்குச் சென்ற சிறுமி சினேகா, மிகவும் சோர்வாக இருந்தார். இதைப்பார்த்த அவருடைய தந்தை, மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது அவள், இரண்டு பேர் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகக் கூறி கதறி அழுதுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளுக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து வெப்படை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றம் என்பதால், இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

Advertisment

சம்பவத்தன்று இரவு ஷிப்டுக்கு வேலைக்குச் சென்ற சினேகா, பணி நேரத்தில் தலைக்கு அணிய வேண்டிய துணியால் ஆன தொப்பியை மறதியாக வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அதையடுத்து தொப்பியை எடுத்து வருவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது ஆலையின் வாசலில் நின்றிருந்த இருவர், சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து, அங்குள்ள ஒரு இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் சிறுமியை இரவு முழுவதும் வன்கொடுமை செய்துள்ளனர். விடிந்த பிறகு அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்த சிறுமி, வீட்டுக்கு வந்துவிட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீவிர விசாரணையில், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த விஜயன் (24), அய்யாதுரை (29) ஆகியோர்தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும், அவர்கள் இருவரும் மூட்டை தூக்கும் தொழிலாளிகள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) அவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.