ADVERTISEMENT

அரிக்கொம்பனால் ஏற்பட்ட சோகம்; முதலமைச்சர் நிவாரணம்

03:10 PM May 30, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி கம்பம் நகரில் அரிக்கொம்பன் யானையால் தாக்கப்பட்ட பால்ராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் முதலமைச்சர் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கடந்த 27-5-2023 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த திரு.பால்ராஜ் என்பவர் அரிக்கொம்பன் என்ற காட்டு யானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து சிகிச்சைக்காக தேனி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அதற்கு பலனின்றி இன்று (30-5-2023) அவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த திரு.பால்ராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் இந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானையைப் பிடிப்பதற்கு தமிழ்நாடு அரசின் வனத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கென மூத்த அனுபவம் வாய்ந்த வன அலுவலர்களைக் கொண்ட ஒரு சிறப்புக் குழு திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழுவும், முதுமலை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் உள்ளூர் வனப்பகுதியைச் சார்ந்த 16 யானைத்தட கண்காணிப்புக் காவலர்கள் இந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அந்த யானையை பத்திரமாக வனப் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

இதற்கென ஒரு தனி கட்டுப்பாட்டு அறையும் கம்பம் வனச் சரக அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, பிற பகுதியினைச் சார்ந்த 200 வனத்துறை அலுவலர்கள் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT