ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள சித்தோடு வசுவபட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன்(75). இவர், ஆவினில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று சித்தோடு நால்ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏடிஎம் மையத்திற்குப்பணம் எடுக்கச் சென்றார். அப்போது பணம் எடுப்பதில் சிரமம் இருந்ததால் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் பணம் எடுக்க உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
பிரபாகரனிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கிக் கொண்ட அந்த வாலிபர் பிரபாகரனிடம் ஏடிஎம் பின் நம்பரைக் கேட்டு பணம் எடுத்துக் கொடுப்பது போல் நடித்துள்ளார். பின்னர் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று வருகிறது எனவே வங்கிக்குச் சென்று கேளுங்கள் என்று அந்த வாலிபர் முதியவரிடம் கூறியுள்ளார். அப்போது பிரபாகரனின் ஏடிஎம் கார்டை தான் வைத்துக்கொண்டு தன்னிடம் இருந்த மற்றொரு ஏடிஎம் கார்டை முதியவர் பிரபாகரனிடம் கொடுத்துள்ளார். இதை கவனிக்காத பிரபாகரன் ஏடிஎம் மையத்தை விட்டு வெளியே சென்றதும், பிரபாகரனின் ஏடிஎம் கார்டைபயன்படுத்தி இந்த வாலிபர் ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் 5 முறை ரூ. 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.
வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று கூறியதால் பிரபாகரன் கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது வங்கி அதிகாரிகள் பிரபாகரனின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது, சிறிது நேரத்திற்கு முன்பு 5 முறை மொத்தம் ரூ. 50 ஆயிரம் பணம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றுகூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். தனக்கு உதவி செய்வது போல நடித்த வாலிபர் பணத்தைச் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டார் என்பதை உணர்ந்த பிரபாகரன் இது குறித்து சித்தோடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட வாலிபரை தேடி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், கிழக்கு தெருவைச் சேர்ந்த வினோத்(30) என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, வினோத் இதே பாணியில் பலரிடம் கைவரிசை காட்டியதும் அவர் மீது 6 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. பின்னர் வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.