Advertisment

சாக்கடைக்குள் இறங்கிய தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Advertisment

Tragedy befalls worker who fell into sewer

திருச்செந்தூரில் பாதாளச் சாக்கடை அடைப்பைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது தவறி உள்ளே விழுந்ததில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளி மணி என்பவர் உயிரிழப்பு.

திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பாதாளச் சாக்கடைகள் அடைப்பை சரி செய்வதற்காக திருச்செந்தூர் நகராட்சி சார்பாக ஒப்பந்த பணியாளர்கள் பணியில் நேற்று(8.6.2025) ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஒப்பந்த தொழிலாளியான திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானை சேர்ந்த 40 வயதான மணி என்பவர் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணியில் இருந்து வந்துள்ளார்.

Advertisment

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் தொழிலாளி மணி சக ஊழியர்களை அழைத்து கொண்டு அந்த இடத்துக்கு சென்று சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அடைப்பை சரி செய்ய பாதாள சாக்கடைக்குள் இறங்கிய போது எதிர்பாராத விதமாக தவறி நிலைதடுமாறி உள்ளே விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாதாள சாக்கடைக்குள் இருந்து மணியை மீட்டனர். அப்போது அவர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடலைத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்த பணியாளர் ஒருவர் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் எஸ்.மூர்த்தி

police Sewer tiruchendur
இதையும் படியுங்கள்
Subscribe