நீட் தேர்வு மையத்திற்கு வர வழி தெரியாமல் தவித்த மாணவிக்கு உதவிய காவலர்களின் செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தேசிய தேர்வு முகமை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தும் நீட் நுழைவு தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெற்ற இந்த நீட் தேர்வு எழுதுவதற்கு கடும் சோதனைகளுக்கு பிறகு மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தேர்வு மையத்திற்கு வழி தெரியாமல் தவித்த மாணவி ஒருவரை தக்க சமயத்தில் தேர்வு மையத்திற்கு அழைத்து வந்த காவலர்களின் செயல் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நீட் தேர்வைஎழுத வந்த மாணவி ஆனந்தி வழி தவறி தேர்வுக்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளார். அப்போது ஆவடி போக்குவரத்து காவலர்கள் தனசேகர் மற்றும் தினேஷ் குமாரசாமி ஆகிய இரு காவலர்கள்மாணவியையும் அவரது பெற்றோரையும் தங்களின் ரோந்து வாகனத்தில் அழைத்து வந்து தக்க சமயத்தில் தேர்வு மையத்தில் விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அந்த இரு காவலர்களுக்கு பாராட்டுகளைத்தெரிவித்து வருகின்றனர்.