Traffic congestion ... Motorists waiting for hours ..!

திருவண்ணாமலை நகரத்திற்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வருகின்றனர். அதேபோல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு திருவண்ணாமலை வழியாக தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் செல்கிறார்கள். அவர்கள், அண்ணாமலையார் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்கிறார்கள். மேல்மருவத்தூர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின்பேருந்துகள் கோயில் அருகில் வராமல் நகரத்தின் சில இடங்களுக்குத் திருப்பிவிட்டு காலி மைதானங்களில் நிறுத்திவைக்கப்படுகிறது. கார்களை மட்டும் கோயில் பிரகாரத்தைச் சுற்றி நிறுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், கடந்த 20 நாட்களாக திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளிலும், குடியிருப்புச் சாலைகளின் ஓரமாகவும் நிறுத்திவிடுகின்றனர். இதனால் வழக்கமாகச் செல்லும் வாகனங்கள்கூட இந்தச் சாலைகளில் செல்ல முடியாமல் பெரும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குகின்றன.

Advertisment

தற்போது தை மாத வளர்பிறை முகூர்த்த தினம் என்பதால், அதிகமான அளவில் நகரில் உள்ள மண்டபங்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமணத்துக்கு வருபர்களின் நான்கு சக்கர வாகனங்களும் நகருக்குள் அதிகமாக வருகின்றன. 90 சதவீத மண்டபங்களில் பார்க்கிங் வசதியில்லாததால் சாலைகளிலேயே அந்த வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் நகரத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 15 நிமிடத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஒருமணி நேரத்துக்கும் மேலாகிவிடுகின்றன. உள்ளூர் நபர்கள் சின்னச் சின்ன சாலைகள் வழியாகச்செல்ல முடிவெடுத்தாலும் அங்கும் வெளியூர் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

திருவண்ணாமலை நகரப் போக்குவரத்துக் காவலர்கள் கூறுகையில், "திருவண்ணாமலை நகரத்துக்கு வருவதற்கு 9 முக்கியச் சாலைகள் உள்ளன. இதில், திருவண்ணாமலை டூ சென்னை சாலையில் தாலுக்கா அலுவலகம் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால், அந்தச் சாலை வழியாக விழுப்புரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, செங்கம், சாத்தனூர் அணை பகுதிகளுக்குச்சென்றுகொண்டிருந்த பேருந்துகள்நகரத்தின் பிரதான வீதிகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. நகருக்குள் பேருந்துகள் செல்ல வேண்டிய சூழ்நிலையால் நகரத்துக்குள் ஒருவழிப்பாதையை இருவழிப்பாதையாகப் பயன்படுத்த அனுமதித்துள்ளோம். இதுபோன்ற காரணங்களால் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது" என்கிறார்கள்.

சமூக ஆர்வலர்களோ, "பேருந்து நிலையத்தை நகரத்துக்கு வெளியே இடமாற்றம் செய்ய வேண்டும். அதைச் செய்தால் பாதி போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும், பலநிறுவனங்கள் அடுக்குமாடி வியாபார நிறுவனங்களைப் புதியதாகக் கட்டுகிறது. அப்படிக் கட்டும் நிறுவனங்கள் பார்க்கிங் வசதி செய்வதேயில்லை. இதனால், அங்கு வரும் பொதுமக்கள் சாலைகளின் ஓரம்வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது உடனடி தேவை நகருக்குள் முக்கியச் சாலைகளை மறித்து மேடை அமைத்து கூட்டங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது. அப்படி அனுமதிப்பதாலே போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகின்றன. தற்போது நகரம் இருக்கும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல எந்த அமைப்பின் கூட்டங்களையும் நகருக்குள் நடத்த,காவல்துறை அனுமதிக்கக்கூடாது. அதனை முதலில் செய்தாலே தற்போதைக்குப் போக்குவரத்து நெரிசலை ஓரளவு தவிர்க்க முடியும், பொதுமக்களும் நிம்மதியாக இருப்பார்கள்" என்கிறார்கள்.