சென்னை ஜெ.7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் நாளை மறுநாளான ஞாயிற்றுக்கிழமை (01.09.2024) அன்று காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரைஹேப்பி ஸ்ட்ரீட் (Happy Street) நிகழ்ச்சியினை நடத்தத் தனியார் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாகச் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கைச் செய்திக் குறிப்பில், “ஆலந்தூர் மற்றும் ஜி.எஸ்.டி. (GST) சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சன்ஷைன் பள்ளி (Sunshine School) அருகில் வலது புறமாகத் திரும்ப வேண்டும். பின்னர் அங்கிருந்து எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் யூ (U) திருப்பம் செய்து ரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.
மேலும் விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்ள வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்பில் யூ திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.