Traffic change in Chennai Police announcement

முன்னாள் குடியரசுத் தலைவரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத் திருமண விழா மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காகக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இன்று (31.01.2025) சென்னை வரவுள்ளனர். இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாகச் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தினை சுமுகமாகவும், தாமதத்தைக் குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் மதியம் 02.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

Advertisment

அதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு (ECR) செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை (OMR) மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் கிழக்குக் கடற்கரைச் சாலை வரை உள்ள சாலையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும். எனவே பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.