Skip to main content

பெண் குழந்தைகளின் கும்மி, இளைஞர்களின் போர்காய் விளையாட்டுடன் நடக்கும் கலாச்சார பொங்கல் விழா...

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு மறுநாள் வித்தியாசமான திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

 

traditional pongal celebration in puthukottai

 

 

செரியலூர் கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைகள் பருவமெய்துவதற்கு முன்பு இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும். பிறந்த சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் தாய் அல்லது சகோதரிகள் கலந்து கொள்வார்கள். திருவிழாவில் பங்கேற்கும், குழந்தைகள், பெண்கள் திருவிழா முடியும் வரை விரதம் இருந்து கலந்து கொள்ள வேண்டும்.  

செரியலூர் கிராமத்தில் பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் காலையில் வெற்றுப் பொங்கல் வைத்து 3 படையல் வைத்து ஒரு படையலை விரதம் இருப்பவர்கள் சாப்பிடவும் மற்ற இரு படையல்களை ஒரு ஓலை கூடையில் இரு பெரிய சாணிப் பிள்ளையார்களுடன் 92 சிறு சாணப் பிள்ளையார் செய்து அதில் கூழைப் பூ, ஆவாரம் பூ, அருகம்புல், வேப்பிலை, கரும்பு, வெல்லம் ஆகியவற்றை வைத்து கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தடியில் கிராமத்தின் அனைவரும் ஒன்று கூடி பெண்கள், பெண் குழந்தைகள் தனித்தனியாக கும்மியடித்து வழிபாடு செய்து அணிவகுத்து தீர்த்தான் ஊரணி வரை கொண்டு செல்வர். அங்கு கூடையில் உள்ள பொங்கலை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு மற்ற பொருட்களை குழியில் புதைத்துவிட்டு ஒரு சிறு பிள்ளையாரை அருகில் உள்ள ராக்காச்சி அம்மன் கோயில் காட்டில் வைத்து வழிபடுவர். இந்த திருவிழாவை கொப்பித் திருவிழா என்று இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

இன்று நடைபெற்ற இந்த திருவிழாவில் ஏராளமான பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். இது குறித்து அந்த பகுதி பெண்கள் மற்றும் கிராம மக்கள் கூறும் போது, காத்தான் - தீர்த்தான் என இரு சகோதரர்கள் முந்தைய காலத்தில் வாழ்ந்துள்ளனர். அதில் காத்தான் மகள் கொப்பி அம்மாள் சிறு குழந்தையாக இருக்கும் போது தனது பெரியப்பா தீர்த்தான் வீட்டுக்கு காட்டுப் பகுதியில் சென்ற காணாமல் போய்விட்டார். பல நாட்களுக்கு பிறகு ஊரின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தின் மேல் இருந்து அம்மை நோய் தாக்கி இறந்து கீழே விழுந்ததை பார்த்து கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அதன் பிறகு இந்த கொடிய நோயான அம்மைநோய் வந்து யாரும் இறக்க கூடாது என்பதற்காக அம்மைக்கு பலியான கொப்பியம்மாளை நினைத்து சிறு பெண் குழந்தைகள் 
 
அம்மைக்கு எதிரான நோய் தடுப்பு மூலிகைகளுடன் ஊர்வலமாக சென்று தீர்த்தான் ஊரணியில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. இது பன்நெடுங்காலமாக உள்ளது. அதனால் காலங்கள் மாறினாலும் கலாச்சாரத்தை மாற்ற விரும்பாமல் கிராமத்தினர் இந்த வழிபாட்டை செய்து வருகிறோம். வெளியூர், வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இந்த நாளில் சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள் என்றனர்.    

பழமையான பாலை மரத்தடியில் பெண்களும், பெண் குழந்தைகளும் கூடி கும்மிடியப்பதுடன் பாலை மரத்தை தெய்வமாக வணங்கி படையலிட்டு அதன் பிறகே ஊர்வலமாக செல்கிறார்கள். 

இளைஞர்களின் போர்க்காய் விளையாட்டு :  

  தமிழகத்தில் பொங்கல் விழாவை கொண்டாட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது போல செரியலூரில் தேங்காயோடு தேங்காய் மோதி உடைக்கும் போட்டி நடத்தப்படுகிறது. பல சுற்றுகளில் போட்டியிட்டு கடைசி தேங்காயை உடைத்து வெற்றி பெற்ற தேங்காய்க்கு பரிசும், சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது.  

தை திருநாளை தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையாக 3 நாட்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாட்களில் கிராமங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த வகையில் தமிழகம் எங்கும் மாடுகளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது வித்தியாசமான போட்டிகளை நடத்தி வருகின்றனர்.  

இந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவூரணி, தென்னங்குடி, வலப்பிரமன்காடு, செருவாவிடுதி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதாவது எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும். இந்த மோதலில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர்.  இதுவரை அனைத்து ஊர்களிலும் யார் வேண்டுமானாலும் விரும்பியவர்களின் தேங்காய்களுடன் மோதிக் கொண்டு உடையும் தேங்காயை எடுத்துச் செல்லும் விளையாட்டு நடந்தது.  

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக செரியலூர் கிராமத்தில் உள்ள இளைஞர்களால் களம் அமைத்து போர் தேங்காய் உடைக்கும் போட்டியும் வெற்றி பெறும் தேங்காய்க்கு ரூ. ஆயிரம் பரிசும் அறிவித்திருந்தனர். அதே போல இந்த ஆண்டு வியாழக்கிழமை நடக்கும் போய்காய் உடைக்கும் போட்டிக்கு.. முதல் பரிசு பெறும் தேங்காய்க்கு ரூ. 2001, இரண்டாம் பரிசு ரூ. 1001, மூன்றாம் பரிசு ரூ 501 மற்றும் ஆறுதல் பரிசகளும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி வித்தியாசமான விழாக்களும், போட்டிகளும் செரியலூரில் நடப்பதால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து ரசிக்கின்றனர்.  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்