
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே கீழ கோவில்பட்டி கிராமத்தில் 'தை' திருமகளை வழியனுப்பும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தக் கிராமத்தில் பாரம்பரிய வழக்கப்படி மார்கழி மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டின் முன் கோலத்தின் மீது சானத்தோடு வைக்கப்படும் பூசணிப் பூவை எருவாட்டி போல் தட்டி வைப்பது வழக்கம். இதன் தொடர்ச்சியாக தை பிறந்து பொங்கல் திருநாள் முடிந்து 4ம் நாளில் தட்டி வைத்த பூ எருவாட்டியை பகவதி அம்மன் கோவிலுக்கு எடுத்து வந்து பெண்கள் அனைவரும் கூடி தானானே பாடல் பாடி கும்மியடித்துக் குலவையிட்டு காடு, கரை செழிக்க, கால்நடைகள் வளமோடு வாழ, கிராம மக்கள் நோய் நொடியில் இருந்து மீண்டுவர பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.
பாரம்பரிய நிகழ்வுகளை அடுத்த தலைமுறையும் தொடர வேண்டும் என்பதற்காக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கும் தானானே பாடல்கள் மற்றும் கும்மியடிக்கும் கலையையும் கற்றுத் தருகின்றனர். பின்பு அனைவரும் மருதாநதி ஆற்றுக்குச் சென்று எடுத்துவந்த பூ எருவாட்டியில் தீபம் ஏற்றி அதனை ஆற்றில்விட்டு தை திருமகளுக்கு நன்றி சொல்லி வழியனுப்பினர். முன்னோர்கள் கற்றுத் தேர்ந்த பாரம்பரியம் காக்கப்படவும், அது அடுத்த தலைமுறைக்கும் தொடரவும் இக்கிராம மக்கள் தொடர்ந்து 'தை' திருமகளை வழியனுப்பும் நிகழ்வினை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றார்கள்.