
திண்டுக்கல் மாவட்டநிலக்கோட்டையில் முன்னேற்பாடு செய்யாமல் காய்கறி சந்தையினை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து காய்கறிகளைச் சாலையில் கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தினசரி காய்கறி சந்தையைஅரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்திற்கு இடமாற்றம் செய்தது.
முன் அறிவிப்பு இல்லாமல் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் எந்த ஒரு முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை.சுகாதார வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் அங்கு செய்யப்படவில்லை. இன்று (11.05.2021) காலை தினசரி சந்தையை மூடிய பேரூராட்சி நிர்வாகம், மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு அனைத்து காய்கறிவியாபாரிகளும் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியது. எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாத புதிய இடத்திற்குச் செல்ல மறுத்த வியாபாரிகள், விற்பனைக்கு கொண்டுவந்த காய்கறிகளைச் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புதிய இடத்தில் யாரும் கடை போட செல்லாததால் அங்குவெறிச்சோடி காணப்பட்டது.காய்கறிகளை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Follow Us