விவசாயிகளிடம் லட்சக்கணக்கில் மோசடி; வியாபாரி கைது

trader who cheated farmers by buying products for 50 lakhs

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், கடலூர் ரோட்டில் விவசாய விலை பொருட்கள் மண்டி வைத்துள்ளவர் தர்மராஜன்(47). இவர் கடந்த கொரோனா காலகட்டமான, 2020- 21 ஆம் ஆண்டில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் மணிலா, நெல், திணை, கம்பு சோளம் உள்ளிட்ட தானியங்களை, வாங்கியுள்ளார். ஆனால் அவற்றிற்கு உண்டான பணத்தை, விவசாயிகளுக்கு தராமல் கடந்த 2 வருடங்களாக ஏமாற்றி வந்துள்ளார்.

இவரது மண்டியில் விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்த இளங்கோ(60) என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு 20 மூட்டை மணிலா, 65 முட்டை கம்பு, 100 மூட்டை திணை ஆகியவற்றை ரூபாய் 5 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதற்கு தர்மராஜன் வழங்கிய காசோலை வங்கியில் பணம் இல்லாததால் திரும்பிவிட்டது. இதுகுறித்து தர்மராஜனிடம் இளங்கோ பலமுறை பணத்தை கேட்டும்அவர் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதேபோல் விருத்தாச்சலம் பெரியார் நகரை சேர்ந்த மாதவனிடம் ரூபாய் 13 லட்சம், பண்ருட்டி மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராம்குமாரிடம் ரூபாய் 16 லட்சம், புவனகிரி அந்தியநல்லூரைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் ரூபாய் ஒரு லட்சத்து 11 ஆயிரம், விளங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரனிடம் ரூபாய் 4 லட்சம், வேப்பூர் தாலுக்கா வன்னாத்தூரை சேர்ந்த பாவாடை என்பவரிடம் ஒரு லட்சம் என சுமார் 50 லட்சத்திற்கு பல விவசாயிகளிடம் தானியங்களை கொள்முதல் செய்த தர்மராஜன், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட இளங்கோ, மாதவன் ராம்குமார் உள்ளிட்ட ஏழு பேர் விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மதுரையில் தலைமறைவாக இருந்த தர்மராஜனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விருத்தாச்சலம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து, சுமார் 50 லட்சம் மதிப்பிலான, தானிய பொருட்களை, வாங்கியதும், அதற்கானபணத்தை தராமல், இரண்டு வருடமாக இழுத்தடிப்பு செய்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்து தர்மராஜை சிறையிலடைத்தனர். அதேசமயம் விவசாயிகளிடம் ஏமாற்றிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளிடம், தானிய பொருட்கள் வாங்கி, பணத்தை தராமல் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய மோசடி மன்னன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arrested Cuddalore Farmers police
இதையும் படியுங்கள்
Subscribe