ADVERTISEMENT

“ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பச்சை பொய் பேசுகிறார்” - டி.ஆர்.பாலு

03:25 PM Oct 24, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் மருது சகோதரர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று (23-10-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் ஆரியம், திராவிடம் ஒன்று கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காவே கால்டுவெல் போன்றோர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுதந்திர தினத்தை கருப்பு நாள் என்று கூறியவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். சுதந்திரத்திற்கு போராடிய மருது சகோதரர்களும், முத்தராமலிங்க தேவர் ஆகியோரும் வெறும் சாதித் தலைவர்களாக கருதப்படுகின்றனர். காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவர்களாக மாற்றியிருப்பார்கள். தியாகிகளை சாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர்” என்று கூறினார்.

இந்த நிலையில், ஆளுநர் பேசியது குறித்து திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசி வருவது அரசியல் சாசனத்திற்கு அவர் செய்கின்ற துரோகம். பா.ஜ.க தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்கு போட்டியாக, தமிழகத்தின் பா.ஜ.க தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார்.

முதல்வர் தமிழில் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை கேட்டு வாங்கிப் படித்திருந்தால் ஆளுநர் ரவிக்கு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழக வீரர்களை பற்றிய அரிச்சுவடியாவது தெரிந்திருக்கும். ஆதாரமற்ற பொய்களை வாட்ஸ் அப் வதந்திகள் போல பரப்புவதையாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம். பா.ஜ.க.வின் ஊதுகுழலாகப் பச்சைப் பொய்களை மட்டுமே பேசும் ஆளுநர் ரவியின் அடிவயிற்று எரிச்சல், ‘திராவிடம்’ என்ற சொல்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய கவர்னர் என்ற நியமனப் பதவியில் வெட்கமின்றி அமர்ந்துகொண்டு கூச்சமில்லாமல் பொய்களை பேசுகிறார் ஆளுநர். தமிழக மக்களின் வரிப்பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதைக் கைவிட வேண்டும். இல்லையென்றால், ஆளுநர் பதவியை விட்டு விலகி அரசியல்வாதியாக, ஏன் பா.ஜ.கவின் தலைவராகவோ, ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராகவோ ஆகட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT