
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் பெரியார், மேகம், செருக்கல், எட்டி ஆறு, போன்ற பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இதில் மேகம் செறுக்கல் நீர்வீழ்ச்சிகள் வனப்பகுதியில் உள்ளன. அங்கு செல்வதற்கு போதிய பாதை வசதியும் பாதுகாப்பு வசதியும் இல்லாததால் அந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க செல்லும் சுற்றுலாபயணிகள் மிகக் குறைவு. அதையும் கடந்து அந்த அருவிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக்கி இறந்து போன சம்பவங்களும் நடந்துள்ளன. அதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தோடு வந்து வெள்ளிமலை அருகே உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கிறார்கள்.
இங்கு பாதுகாப்பு வசதி மேலும் சாலையோரம் இந்த அருவி உள்ளது. இதனால் இந்த நீர்வீழ்ச்சிக்கு புதுவை, கடலூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை இப்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்து சீசன் காலங்களில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்தபடியே இருக்கும். இங்கு வந்து ஆனந்தமாக குளித்து கல்வராயன் மலையை சுற்றி பார்த்துவிட்டு செல்வதுண்டு. சுமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக போக்குவரத்து தடை இருந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை நின்று போனது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போல் சில நாட்களாக கல்வராயன் மலையில் பெய்து வரும் மழையினால் வறண்டு கிடந்த பெரியார் நீர்வீழ்ச்சிகள் தற்போது தண்ணீர் கொட்டுகிறது.
அதைக் காண்பதற்கும் அங்கே குளிப்பதற்கும் சுற்றுலா பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளன. இங்குள்ள மலையில் வாழும் மலை வாழ் மக்கள் விற்பனை செய்யும் கிழங்கு, தானிய வகைகள், பழங்கள், தேன் ஆகியவற்றையும் வாங்கி செல்கின்றனர் சுற்றுலாப் பயணிகள். இதனால் மலை மக்களுக்கு வருமானம் கிடைக்கிறது. மீண்டும் கரோனா நோய் பரவல் இல்லாமல் இதே நிலை தொடர்ந்தால் சுற்றுலா பயணிகள் வருகை இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள் கல்வராயன்மலை மக்கள்.