
கேரளாவின் கோட்டயம் மற்றும் மலபார் பகுதியின் மன்னராக, கடந்த 1753ல் ஆட்சி புரிந்தவர் பழசி ராஜா. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை, நெலாக்கோட்டை, ஸ்ரீ மதுரை, சேரம்பாடி மற்றும் மசினகுடி இவற்றுடன் கண்ணனூர் மற்றும் வயநாடு மாவட்டத்தின் தலைச்சேரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி கோட்டயம் மண்டலமாக இருந்தது. ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன், ஆங்கில அரசுக்கு எதிராக போராடியதால், மக்கள் இவருக்கு ஆதரவு அளித்தனர்.

ஆங்கிலேயப் படைகள் இவரின் கோட்டயம் அரண்மனையை சுற்றி வளைத்த போது, அங்கிருந்து வயநாடு மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தார். 1799-ல் வயநாடு பகுதிகளை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார். தொடர்ந்து பழசிராஜா தனது வீரர்களுடன் வனங்களில் தங்கி போர் புரிந்தார். மேலும் குறிச்சியா பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து, ஆங்கிலேயருக்கு எதிராக போரில் பங்கேற்றார். அப்போது குறும்பா, பனியா பழங்குடியின மக்கள் ஆதரவு கொடுத்ததுடன், வீரர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்கும் இடங்களை தயார்படுத்தி கொடுத்தனர். குறும்பா பழங்குடியின மக்கள் வில், ஆம்பு போன்ற ஆயுதங்களை போரில் பயன்படுத்தினார்கள். மேலும் வயநாடு மற்றும் நீலகிரி மலைகளில் அதிக அளவில் தங்களுக்கான தளங்களை ஏற்படுத்தினார். அதில் பந்தலூர் அருகே கோட்டமலை மற்றும் நெலாக்கோட்டை பகுதிகளில் குகைகள் அமைத்து, அதில் தனது படைகளுடன் தங்கியிருந்து ஆங்கிலேயருக்கு எதிராகபழசி ராஜா கொரில்லா போர் தொடுத்தார்.அதில் ஒரு குகை தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் செயல்படும் வெண்ட்வொர்த் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை அருகே, சிறிய குழியாக காணப்பட்ட பகுதியைச் சீரமைத்து பார்த்ததுடன், வரலாற்றுப் பதிவுகளை ஆய்வு செய்ததில், அது பழசி ராஜா தங்கியிருந்த குகை என்பது தெரிய வந்தது. இந்த குகை சுமார் 30 மீட்டர் தூரம் சென்றதும், பிரிந்து இரண்டு பாதைகளாக செல்கிறது. தற்போது குகையின் உள்பகுதியில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு, பார்வையாளர்கள் செல்லும் அளவிற்கு சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்த குகையினை தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பழசி ராஜாவின் 6-வது தலைமுறையை சேர்ந்த கொச்சு தம்புராட்டி சுபா வர்மா, அவரது கணவர் டாக்டர் கிஷோர் திறந்து வைத்து, பழசி ராஜாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். எஸ்டேட் நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் மன்னர் வாரிசுகளுக்கு பசுந்தேயிலை மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அவர்களின் மூதாதையர்களை நினைவு கூர்ந்து, அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டனர். இந்த குகை 1791 -1801ம் ஆண்டு காலகட்டங்களில் அமைக்கப்பட்டு, கொரில்லா போர் தளமாக செயல்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிப்பதாகவும், இந்த பகுதியை இனி சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம் என்றும் முறையாக இந்த குகை பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்பட்டதாகவும் எஸ்டேட் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் போரின்போது வில் அம்புடன் போரில் பங்கேற்ற குரும்பா சமுதாயத்தை சார்ந்த கோவிந்தன் ஆசாரி, போரில் தனது தாத்தா பயன்படுத்திய வில் அம்புடன் பங்கேற்றார். அதேபோல் பழசி ராஜாவின் உருவத்தை உருவாக்கிய சிற்பி பினு ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.

இதுகுறித்து சுபா வர்மா கூறுகையில், “எங்களின் மூதாதையரான பழசிராஜா சுமார் 31 ஆண்டுகள் ஆங்கிலேயருடன் போரிட்டார். அவர் தேசத்திற்காக வனங்களில் தங்கியிருந்து போராடிய இடத்தையும், அவர் தனது படை வீரர்களுடன் தங்கி இருந்த குகையையும் பார்க்க முடிந்தது பெரும் பாக்கியமாக கருதுகிறோம். இது போன்ற வரலாற்றுச் சுவடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், வெளிப்படுத்துவதுடன் நமது முன்னோர்களான போர் வீரர்களுக்கு மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்கள் உதவி செய்தது குறித்து தெரிந்து கொள்ள செய்ய வேண்டியதும் அவசியம் ஆகும்” என்றார்.