சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுற்றுலா மையத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள். இதில் அரசின் விடுமுறைகாலங்களில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் மிகவும் அதிகளவில்இருக்கும். இந்நிலையில், சனிக்கிழமை மாலை பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்துவது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இவர் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு மூலம் சென்று அலையாத்தி காடுகளை கண்டு ரசித்தார். அலையாத்தி காடுகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதியையும் ஆய்வு செய்தார். மேலும், பிச்சாவரத்திற்கு ஆந்திராவில் இருந்து வருகை தந்த சுற்றுலாப்பயணிகளிடம் இங்கு என்ன வசதி செய்ய வேண்டும், தற்போதுள்ள வசதிகள் எப்படி உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். இதற்கு சுற்றுலாப்பயணிகள், இங்கு நல்ல முறையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும், அதிகாலையில் படகு சவாரி செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும்கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களையும் மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடன் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உடனடியாக நிறைவேற்றப்படும். இந்த சுற்றுலா மையத்தில் வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறைக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் உள்ளன. துறைரீதியாக இரண்டு செயலாளர்களிடமும் பேசி அதனைத்தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
இவருடன் கிள்ளை பேரூராட்சி மன்றத்தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், சுற்றுலாத்துறை உதவி மண்டல பொது மேலாளர் இமயவரம்பன், மண்டல மேலாளர் கார்த்திகேயன், சுற்றுலாத்துறை அலுவலர் முத்துசாமி, பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் தினேஷ் குமார், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்றத்தலைவர் பழனி உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.