பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வீட்டிற்கு வேலைக்கு வந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக எழுந்த புகாரில்தற்பொழுது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த12 ஆம்வகுப்பு முடித்த இளம்பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக புரோக்கர் ஒருவரின் மூலம்பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வேலைக்குச் சென்றஇளம்பெண்ணை எம்எல்ஏ மகன்ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் ஆண்டோ மெர்லின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கொடுமை தாங்க முடியாமல் இளம்பெண், 'தன்னை வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு கேட்டேன். ஆனால் எனது செல்போனை பறித்து வைத்துக் கொண்ட அவர்கள் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தனர். மேலும் மிரட்டல் விட்டதோடு அவருக்கு பல்வேறு வகைகளில் காயங்களையும் ஏற்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் ஏதுமில்லை' என பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்து இருந்தார்.
இளம் பெண்ணின் பேட்டிகள் மற்றும் ஏற்பட்டகாயங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.