Skip to main content

ஒட்டகங்கள் சித்ரவதை; விலங்கு பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

torture of camels; Officials inspect animal farm in Sulur

 

கோவையில் ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் அங்கிருந்த பல்வேறு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒட்டகம் ஒன்றை சிலர் தாக்கி துன்புறுத்தும் காட்சி ஒன்று வைரலாகி இருந்தது. இந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில் அது கோவையில் நிகழ்ந்த சம்பவம் என்பது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், கோவை சூலூரில் இயங்கி வந்த சங்கமித்ரா என்ற விலங்கு பண்ணையில் இந்த கொடுமை நிகழ்ந்தது தெரிய வந்தது.

 

அந்த விலங்கு பண்ணையில் சட்டவிரோதமாக விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. உடனடியாக விலங்கு நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காட்சிப்பொருளாக பயன்படுத்த ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை உரிய அனுமதி இல்லாமல் அடைத்து வைத்ததாக தெரியவந்தது. இந்த சோதனையில் ஐந்து ஒட்டகங்கள், நான்கு குதிரைகள், இரண்டு கழுதை உள்ளிட்ட அனைத்து விலங்குகளையும் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் விலங்கு நல வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட ஒட்டகங்கள் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை சட்டவிரோதமாக நடத்தி வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயாராகி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.