/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/meat-art.jpg)
புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ளது கோட்டகுப்பம். இதன் அருகில் கீழ்புத்துப்பட்டு பகுதியில் விழுப்புரம் மாவட்ட போலீசார் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். புதுச்சேரியிலிருந்து சரக்குகளை கடத்தி செல்பவர்கள் இந்த சோதனைச் சாவடியில் வாகன சோதனையின் போது போலீசாரிடம் அவ்வப்போது சிக்கிக் கொள்வது வழக்கம்.
அதன்படி நேற்று கீழ்புத்துப்பட்டு சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இளைஞர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் ஒரு சாக்கு மூட்டையுடன் சென்றனர். அவர்களை வழிமறித்த போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்கு சந்தேகத்திற்கு இடமாக இருந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது உள்ளே பல வகை ஆமைகள் இருந்தன. இது குறித்து அந்த இளைஞரிடம் போலீசார்நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கடலூர் மாவட்டம் வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகையன்(வயது 24), கார்த்திக் (வயது 24) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கழிவுநீர் சுத்தம் செய்யும் வாகனத்தில் கூலிக்கு வேலை செய்து வருபவர்கள். இவர்கள் இருவரும் கோட்டகுப்பம் புதுச்சேரி பகுதியில் உள்ள முத்தியால்பேட்டை மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள கால்வாய்களில் கிடைக்கும் பல வகையான ஆமைகளைப் பிடித்து அதை கறிக்காக கொண்டு சென்று விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த சோதனையின் போது பல்வேறு வகை இனங்களைச் சேர்ந்த 46 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர், அவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட ஆமைகளை கடத்திச் சென்ற இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரி கடலோர பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)