தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பொழிந்துள்ளது.
வரும் மே 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 15, 16, 17, 18, 19 ஆகிய ஐந்து நாட்களுக்கு விருதுநகர், தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையை அடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கடிதம் மூலம் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பொழிந்துள்ளது. கும்பகோணம் நகரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. கும்பகோணம் கரிக்குளம், அம்மாசத்திரம் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. அதேபோல். தஞ்சாவூரில் மிதமான மழை பொழிந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 10.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யத்தில் 7.28 சென்டி மீட்டர், திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் 6.2 சென்டி மீட்டர் மழையும், மயிலாடுதுறையில் 6 சென்டிமீட்டர் மழையும், திருவாரூர் முத்துப்பேட்டையில் 5.6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையில் பல இடங்களில் நேற்று இரவு முதல் மழை பொழிந்த நிலையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பொழிந்து வருகிறது. திருச்சியில் திருவெறும்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பொழிந்து வருகிறது. நாகையில் நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திருப்பூண்டி, திருக்குவளை, தலைஞாயிறு பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. மயிலாடுதுறையில் சீர்காழி ,கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி, செம்பனார்கோவில் பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.
தமிழகத்தில் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.