Tons of dead floating fish! Thiruvekkadai is surrounded by stench!

Advertisment

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதியில் கூவம் ஆறு செல்கிறது. கூவம் என்ற இடத்தில் இருந்து தொடங்கும் நதி, மேற்குறிப்பிட்டுள்ள பகுதி வரை நல்ல தண்ணீராக வரும் நிலையில், இதற்கு பிறகு கழிவுநீர் கலந்து கழிவு நீராக மாறி கடலுக்குச் செல்கிறது.

கூவ நதியின் இந்த பகுதியில் இன்று காலை செடிகளுக்கு மத்தியில் அதிக அளவில் மீன்கள் செத்து மிதப்பதைக் கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்குத்தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்டு கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் நான்கு டன் அளவுக்கான மீன்கள் இப்படி செத்து மிதந்துள்ளன. ஒவ்வொரு மீனும் அரை கிலோ முதல் ஒரு கிலோ எடை வரை இருந்தது.

இந்த பகுதியில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டிவிட்டு செல்வதாலும், தனியார் நிறுவனங்களில் இருந்து இரசாயனங்கள் கூவத்தில் கலப்பதாலும் மீன்கள் செத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Advertisment

இதுகுறித்து நகராட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, வெயிலின் தாக்கம் மற்றும் நீருக்கு அடியில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் மீன்கள் செத்திருக்கலாம். மேலும், நச்சு கலந்த நீர் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருப்பதால், இறந்துபோன மீன்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனம் கலந்த கழிவுநீர் கூவத்தில் கலக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

டன் கணக்கில் அங்கு மீன்கள் செத்து மிதப்பதால், அங்கு மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் திருவேற்காடு - காடுவெட்டி செல்லும் தரைப் பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.