tondiarpeat corona employees

கரோனா நோய் தொற்றால் சென்னை நகரில் பொதுமக்கள் தொடர்ந்து கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் மாநகராட்சி ஒவ்வொரு வார்டுக்கும் தற்காலிக பணியாளர்களை நியமித்து வீடு வீடாகச் சென்று, வீட்டில் உள்ள நபர்களை கண்காணித்து அவர்களுக்கு தினமும் டெம்பரேச்சர் பார்த்து, அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா அவ்வாறு இருந்தால் அவர்களை அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Advertisment

கரோனா தடுப்பு முன் களப்பணியாளர்கள் என்றழைக்கப்படும் அவர்களுக்கு தினந்தோறும் 500 ரூபாய் சம்பளம் என்ற அளவில் மாநகராட்சியால் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுபோன்று தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் தற்காலிக ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் சம்பளம் முறையாக வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகிறார்கள். மேலும் இது போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ள தற்காலிக ஊழியர்கள் சுமார் 500 பேரை நாளை முதல் பணிக்கு வரவேண்டாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளதாகவும் அவர்கள் இதுவரை வீடு வீடாக சென்று டெம்பரேச்சர் பார்க்க பயன்படுத்திவந்த கருவிகளையும் ஒப்படைக்கும்படி மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முன் களப்பணியாளர்கள் இன்று சென்னை தண்டையார்பேட்டை மண்டல மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். தங்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டரை மாத சம்பளத்தை தர வேண்டும் என்றும், மேலும் தங்களுக்கு மாநகராட்சி தொடர்ந்து பணி வழங்க வேண்டுமென்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டனர். பின் மாநகராட்சி மண்டல அலுவலரைச் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவினையும் வழங்கினர்.

Advertisment

இதுகுறித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த முன் களப்பணியாளர்கள் கூறும்போது, “மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த நாங்கள் மாநகராட்சி கேட்டுக் கொண்டதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதில் நாங்கள் பலர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்து மீண்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆனால், எங்களுக்கு இதுவரை இரண்டரை மாத சம்பளம் தராமல் இருந்து வருகிறார்கள். மேலும் இன்று திடீரென எங்களிடம் உள்ள டெம்பரேச்சர் கருவி பல்ஸ் பார்க்கும் மிஷின் ஆகியவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் நாளை முதல் உங்களுக்கு வேலை இல்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்நிலையில் எங்களை திடீரென வேலையில் இருந்து நீக்கியது எந்த விதத்தில் நியாயம். எனவே எங்களுக்கு நின்றுபோன சம்பளத்தை உடனே வழங்கவேண்டும்” என்றனர்.